தென்காசி மேலசங்கரன்கோயிலில் ஆடித்தபசு விழா கொடியேற்றம்
தென்காசி : தென்காசி மேலசங்கரன்கோயிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.தென்காசி மேலசங்கரன்கோயிலில் ஆடித்தபசு விழா நேற்று துவங்கியது. காலையில் கோமதியம்மன் சன்னதி முன் அமைந்துள்ள கொடிமரத்தில் கொடிபட்டம் கட்டப்பட்டு கொடியேற்றம் நடந்தது. கொடிமரத்திற்கு நறுமணப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அலங்கார தீபாராதனை நடந்தது. கொடியேற்றத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள் கொடிமரம் முன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூங்கோயில் வாகனத்தில் அம்பாள் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.இன்று (2ம் தேதி) காமதேனு வாகனத்திலும், நாளை (3ம் தேதி) சிம்ம வாகனத்திலும், 4ம் தேதி இடப வாகனத்திலும், 5ம் தேதி பூங்கோயில் வாகனத்திலும், 6ம் தேதி அன்ன வாகனத்திலும், 7ம் தேதி புஷ்ப பல்லக்கிலும், 8ம் தேதி கிளி வாகனத்திலும், 9ம் தேதி கனக பல்லக்கிலும், 10ம் தேதி ரிஷப வாகனத்திலும் காலையிலும், இரவிலும் அம்பாள் திருவுலா காட்சி, சீர்பாதம் நடக்கிறது.வரும் 11ம் தேதி மாலையில் தெற்குமாசி வீதியில் கோமதி அம்பாளுக்கு சுவாமி சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் ஆடித்தபசு காட்சி நடக்கிறது. சுவாமி, அம்பாள் திருவுலா காட்சிக்கு பின்னர் இரவு காட்சி நடக்கிறது. 12ம் தேதி இரவு திருக்கல்யாணம் மற்றும் சுவாமி, அம்பாள் திருவீதி உலா நடக்கிறது