திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரத் தேரோட்டம்
வில்லியனூர் : திருக்காமீஸ்வரர் கோவில் ஆடிப்பூர தேரோட்டத்தை முதல்வர் ரங்கசாமி வடம் பிடித்து துவக்கி வைத்தார். வில்லியனூரில், கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.ஆடிப்பூரத் தேர்த் திருவிழா நேற்று முன்தினம் காலை நடந்தது. முதல்வர் ரங்கசாமி, நமச்சிவாயம் எம்.எல்.ஏ., கொம்யூன் பஞ்சாயத்து முன்னாள் சேர்மன் நடராஜன், இந்து சமய நிறுவனங்களின் கமிஷனர் அருணாச்சலம், முன்னாள் கவுன்சிலர் பாலமுருகன் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். மாட வீதிகள் வழியாக வந்த தேர் காலை 9 மணிக்கு நிலையை அடைந்தது. சங்கர் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி மனோகரன் மற்றும் ஊர்மக்கள் செய்திருந்தனர்.