உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அடைக்கலம்மன் கோவிலில் சாட்டையால் அடித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!

அடைக்கலம்மன் கோவிலில் சாட்டையால் அடித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!

கோவை: கோவையை அடுத்த பூசாரிபாளை யம் அடைக்கலம்மன் கோவிலில் பக்தர்கள், சாட்டையால் அடித்து, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. கோவை பூசாரிபாளையத்தில், நுாற்றாண்டு பழமையான அடைக்கலம்மன் கோவில் உள்ளது. கோவிலின் கும்பாபிஷேக விழா, கடந்த ஆகஸ்ட்டில் நடந்தது. கோவில் திருவிழா, டிச., 7ல், கொடிகட்டுதல் நிகழ்ச்சியுடன் நடந்தது. பிடிமண் எடுத்தல், அம்மனை ஆற்றங்கரையிலிருந்து, கோவிலுக்கு அழைக்கும் நிகழ்ச்சிகள் நடந்தன. முக்கிய நிகழ்ச்சியான, பக்தர்கள் சாட்டையால், தங்களை தாங்களே அடித்துக்கொண்டு அம்மனை வழிபாடு செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் தங்களது உடம்பில், கயிற்றால் திரிக்கப்பட்ட சாட்டையால், அடித்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதையடுத்து அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பு அபிஷேக பூஜையுடன் நாளை விழா நிறைவடைகிறது. விழாவில் பங்கேற்ற பக்தர்கள் கூறுகையில், பல நுாறு ஆண்டுகளுக்கு முன்பு, நொய்யல் ஆற்றில் வந்த ஓலைப்பெட்டியில், சாட்டை, அம்பு, வில், தட்டு, மணி, தாலி, நாகர்சிலை ஆகியவை இருந்தன. இதை எடுத்து வந்த ஒரு பெரியவர், அருள் வாக்கு கூறி, கோவில் கட்டி வழிபாடு நடத்த அறிவுறுத்தினார். அதன்படி ஊருக்குள் அம்மன் அடைக்கலம் புகுந்ததால், அடைக்கலம்மன் என்று அழைக்கப்படுகிறார். ஆற்றில் ஓலைப்பெட்டி வந்ததை நினைவுகூரும் வகையில், ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் விழா நடத்தப்படுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக, சாட்டையால் அடித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு நடக்கிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !