உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்வெட்டு, சிற்பங்கள் பாதிக்காமல் இருக்க புதிய நடைமுறை: அறநிலையத்துறை

கல்வெட்டு, சிற்பங்கள் பாதிக்காமல் இருக்க புதிய நடைமுறை: அறநிலையத்துறை

உடுமலை: உடுமலை பகுதியில், வரலாற்று ஆவணங்களாக உள்ள பழங்கால கோவில்களை புனரமைக்கும் போது, கல்வெட்டு மற்றும் சிற்பங்கள் பாதிக்கப்படாமல் இருக்க, தொல்லியல் துறை வழிகாட்டுதலுடன், புதிய நடைமுறையை இந்து அறநிலையத்துறையினர் செயல்படுத்த துவங்கியுள்ளனர். இதனால், வரலாற்று ஆய்வாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உடுமலை பகுதியில், அமராவதி மற்றும் உப்பாறு ஆற்றுப்படுகைகளில், பழங்கால கோவில்கள் அதிகளவு உள்ளன. இக்கோவில்களிலுள்ள கல்வெட்டுகள், இப் பகுதியின் வரலாறு, ஆட்சி முறை, அரசர்கள் மற்றும் பாளையக்காரர்களால் கோவிலுக்கு வழங்கப்பட்ட மானிய நிலங்கள், பூஜை முறைகள், விவசாயம், அருகிலுள்ள ஆற்றுப் படுகை குறித்த தகவல்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சேர, சோழ, பாண்டியர்கள் முதல் பல கட்ட ஆட்சியாளர்களின் பெயர்கள் உட்பட அனைத்து தகவல்களையும் கொண்டுள்ள கோவில் கல்வெட்டுகள், ஆய்வாளர்களால், முக்கிய ஆவணமாகவே கருதப்படுகின்றன.

பராமரிப்பு இல்லாததால் சேதம்: முற்காலத்தில் சிறப்பு பெற்றிருந்த கோவில்கள் பல, காலப்போக்கில், போதிய பராமரிப்பின்றி, சேதமடைந்தன. குறிப்பாக, கற்களால் கட்டப்பட்ட கோவில் சுற்றுச்சுவர்களில், மரங்கள் முளைவிட்டு, வேர்களால், இடைவெளி அதிகரித்து, சேதம் அதிகரித்தது. இவ்வாறு, அமராவதி ஆற்றுப்படுகையான, கொழுமம், கொமரலிங்கம், கடத்துார் உட்பட பகுதிகளிலுள்ள, பல கோவில்கள் பாதிக்கப்பட்டன. இதே போல், உப்பாறு படுகை எனப்படும் குடிமங்கலம் பகுதியில், சோழீஸ்வரர் கோவில், சோமவாரப்பட்டி கண்டியம்மன் கோவில், கோட்டமங்கலம் வல்லக்கொண்டம்மன் கோவில் ஆகிய கோவில்களும் போதிய பராமரிப்பின்றி, முழுமையாக புதுப்பிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன.

பழங்கால கற்கோவில்களை, உள்ளூர் மக்களுடன், இணைந்து இந்து அறநிலையத்துறையினர் புதுப்பிக்கும் போது, கோவில்களிலுள்ள கல்வெட்டுகள் போதிய விழிப்புணர்வு இல்லாமல், சேதமடைதல், கான்கிரீட் பூச்சு போடப்பட்டு, நுாற்றுக்கணக்கான ஆண்டுகளை கடந்த எழுத்துகள் மறைதல் உட்பட பிரச்னைகள் ஏற்பட்டன. குறிப்பாக, அதிட்டானம் எனப்படும், கருவறை சுற்றியுள்ள கற்களில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் புனரமைப்பு என்ற பெயரில், அதிகளவு சிதைக்கப்படுகின்றன. சில கோவில்களில் மட்டும் கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டு, அச்சிடப்பட்டுள்ள நிலையில், பிற கோவில் கல்வெட்டுகள், அழியும் நிலை ஏற்பட்டது. இதனால், வரலாற்று ஆய்வாளர்களும், அப்பகுதி மக்களும், வேதனைக்குள்ளானார்கள்.

புதிய நடைமுறை: பழங்கால கோவில்களிலுள்ள கல்வெட்டுகள் சேதமடையாமல், இருக்க, கோவில் புனரமைப்பு பணிகளை துவக்கும் முன் இந்து அறநிலையத்துறை சார்பில், தொல்லியல் துறையிடம் கருத்துரு கேட்கப்படுகிறது. இதன் அடிப்படையில், தொல்லியல் துறையினர் சம்பந்தப்பட்ட கோவிலில், ஆய்வு நடத்துகின்றனர். கோவிலின் தொன்மை, அமைந்துள்ள கல்வெட்டுகள், புனரமைப்பு பணிகளின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு, கருத்துரு இந்து அறநிலையத்துறைக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.

கோவிலின் தொன்மையை பொறுத்து, புனரமைப்பு பணிகளுக்கு, அனுபவம் வாய்ந்த ஸ்தபதிகள் வரவழைக்கப்பட்டு, அவர்களின் நேரடி கண்காணிப்பில், பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வகையில், சோமவாரப்பட்டி கண்டியம்மன் கோவில், கொழுமம் பெருமாள் கோவில் புனரமைப்பு பணிகளுக்கு, தொல்லியல் துறையினர் கருத்துரு தயாரித்து வருகின்றனர். புதிய நடைமுறை காரணமாக, கல்வெட்டு மற்றும் கோவில் சுவர்களிலுள்ள சின்னங்கள் அழியாமல், மேலும் பல ஆண்டுகளுக்கு வரலாற்று ஆவணங்களாக தொடரும் வாய்ப்புள்ளதால், இம்முறைக்கு வரலாற்று ஆய்வாளர்களும், அப்பகுதி பொதுமக்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

எவ்வித பாதிப்பும் ஏற்படாது: இந்து அறநிலையத்துறையினர் கூறியதாவது: பழங்கால கற்கோவிலில், புனரமைப்பு பணிகளின் போது, தொல்லியல் துறை வழிகாட்டுதல் படி, கல்கட்டுமானம் முழுமையாக சீரமைக்கப்படுகிறது. ஒவ்வொரு கற்களுக்கும் எண்கள் எழுதப்பட்டு, கீழே இறக்கப்படுகின்றன.

இத்தகைய புதுப்பிப்பு பணிகளால், கல்வெட்டுகள் மற்றும் பழங்கால சிற்பங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. உடுமலை பகுதியில், புதிய நடைமுறையில், ஒவ்வொரு கோவிலாக புனரமைப்பு பணிகள் துவங்கப்பட உள்ளது. இரண்டு கோவில்களுக்கு கருத்துரு பெறப்படும் நிலை தற்போது உள்ளது. இவ்வாறு, இந்து அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !