ராமேஸ்வரம் கோயில் கும்பாபிஷேகம் பாதுகாப்பு பணியில் தென்மாவட்ட போலீசார்
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் கோயில் கும்பாபிஷேகத்திற்கு தென் மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஜன., 20ல் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு அக்னி தீர்த்தக்கடல், பொதுமக்கள் கூடும் இடங்கள், வாகன நிறுத்துமிடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு பக்தர்கள் கண்காணிக்கப்பட உள்ளனர். இதற்காக மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை, துாத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த படுகின்றனர். தென் மாவட்ட குற்றவாளிகள் போட்டோ அடங்கிய பட்டியலுடன் குற்றப்பிரிவு போலீசார் வருகின்றனர். இவர்கள் கூட்ட நெரிசலில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க உள்ளனர்.
அனைத்து வாகனங்களும் பாம்பன் பாலத்திற்கு முன் சோதனை செய்த பின்னரே ராமேஸ்வரத்திற்குள் அனுமதிக்கப்படும். கும்பாபிஷேகத்திற்கான யாகபூஜை துவங்கும் ஜன., 15 முதல் கோயில் போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படுகிறது. இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வரக்கூடும் என எதிர்பார்க்க படுகிறது. பக்தர்களின் வாகனங்கள் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் நிறுத்த தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்படுகிறது. கடலோரப் பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. தங்கும் விடுதிகள், மண்டபங்களில் சோதனையிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முக்கிய இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்படுகின்றன. கோயிலுக்குள் நுழையும் பக்தர்கள் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரால் சோதனை செய்யப்படுகின்றனர் என, எஸ்.பி., மணிவண்ணன் கூறினார் கூடுதல் எஸ்.பி.,க்கள் இன்பமணி, வெள்ளைத்துரை உடனிருந்தனர்.