திருக்கோவிலுார் தபோவனத்தில் ஞானானந்தகிரி ஆராதனை விழா!
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் ஞானானந்த தபோவனத்தில், ஞானானந்தகிரி சுவாமிகளின் 42வது ஆராதனை விழா, வரும் ௨௭ம் தேதி நடக்கிறது. விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த தபோவனத்தில் ஞானானந்தகிரி சுவாமிகளின் 42வது ஆராதனை விழா, கடந்த 13ம் தேதி துவங்கியது. 15 நாள் விழாவின் துவக்கமாக, மூர்த்தி வழிபாடு, கணபதி ஹோமம், பாத பூஜை நடந்தது. நேற்று காலை 7:30 மணிக்கு முருகன் காவடி உற்சவம், இரவு 7:00 மணிக்கு ரமானந்த சரஸ்வதி சுவாமிகளின் பஜனை நடந்தது. இன்று காலை 7:00 மணிக்கு சுக்ல யஜூர்வேதம், ரிக், சாம வேதம், தேவி பாகவதம், சங்கர பாஷ்யம், சிவாகமம், ஸ்ரீமத் ராமாயணம், பாராயணங்கள் நடந்தது. ஆராதனை தினம் வரை, தினசரி பாத பூஜைகளுடன் மகா கணபதி ஹோமம், மகா ருத்ர ஹோமம், பகவதி சேவை, லட்சார்ச்சனை, முருகன் காவடி, சதுர்வேத பாராயணம், சங்கர பாஷ்ய பாராயணம், அகண்டதாரா நாம ஜபம் நடக்கிறது. வரும் 20ம் தேதி முதல் 26ம் தேதி வரை, தினமும் மாலை 3:00 மணிக்கு, பரனுார் கிருஷ்ணபிரேமி சுவாமியின் உபன்யாசம் நடக்கிறது. ஆராதனை தினமான 27ம் தேதி அதிகாலை 5:30 மணிக்கு விசேஷ பாத பூஜை, லட்சார்ச்சனை பூர்த்தி, விசேஷ அதிஷ்டான பூஜை,10:15 மணிக்கு ஆராதனை, தீர்த்தநாராயண பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் தபோவன நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.