குக்கே சுப்ரமணியா கோவிலில் பக்தர்கள் உருளு சேவை
மங்களூரு: குக்கே சுப்ரமணியா கோவிலில் நடக்கும், மூன்று நாள், எடே ஸ்நானா - பிரசாதத்தின் மீது உருளுதல் நிகழ்ச்சியில், பக்தர்கள் பங்கேற்றனர். குக்கே சுப்ரமணியா கோவிலில், பிராமணர்கள் உணவு சாப்பிட்ட பின், அந்த எச்சில் இலைகள் மீது பக்தர்கள் உருளும், மடே ஸ்நானா என்ற நேர்த்தி கடன் செய்வது, தொன்று தொட்டு கடைபிடித்து வரும் நிகழ்ச்சி.சில சமூக ஆர்வலர்கள் இதை தடை செய்ய வேண்டும் என, வழக்கு தொடர்ந்தனர். மேல் முறையீடுமாநில அரசும், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அபிடவிட்டில், மடே ஸ்நானாவுக்கு பதிலாக, பிரசாதத்தின் மீது பக்தர்கள் உருளுவதற்கு அனுமதிக்கிறோம். இதை, எடே ஸ்நானா என குறிப்பிட்டது. கடந்த, 2012ல், உயர் நீதிமன்றமும், எடே ஸ்நானாவுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த உத்தரவை மறு பரிசீலனை செய்யும்படி, தலித் சமூக ஆர்வலர்கள், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதற்கிடையில், 2014ல், மடே ஸ்நானாவுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் மீண்டும் அனுமதி அளித்தது. இதையடுத்து அந்தாண்டு நவம்பரில், குக்கே சுப்ரமணியா கோவிலில், 1,600 பக்தர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், மடே ஸ்நானாவுக்கு 2014 டிசம்பரில் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதனால், 2014 டிச., 27ல், வெறும் பிரசாதங்கள் மீது பக்தர்கள் உருளும், எடே ஸ்நானா நடத்தப்பட்டது. இந்தாண்டும், எடே ஸ்நானா, கடந்த, 15ம் தேதி துவங்கியது. முதல் நாளன்று, 130 பக்தர்களும்; 16ம் தேதி, 400; நேற்று மதியம் வரை, 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போராட்டம்குக்கே சுப்ரமணியா கோவிலில் கடைபிடிக்கப்பட்டு வரும், மடே ஸ்நானா மற்றும் எடே ஸ்நானா இரண்டையுமே எதிர்த்து தலித் சமூக ஆர்வலர்கள், பெல்தங்கடி தாலுகா அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர். இதனால் குக்கே சுப்ரமணியா கோவில் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.