எல்லை மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்!
குறிச்சி: எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, 18.12.15-ல் நடந்தது. கோவை – பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில், எட்டிமடையில், 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான, எல்லை மாகாளியம்மன் கோவில் உள்ளது.
ரோடு விரிவாக்க பணிக்காக, கோவில் அகற்றப்பட்டது. ரோட்டிலிருந்து, 1,000 அடி தொலைவில், 23 சென்ட் இடத்தில், முழுவதும் கருங்கற்களை கொண்டு, ஒரு கோடி ரூபாய் மதிப்பில், கோவில் கட்டுமான பணி, மூன்றாண்டுகளுக்கு முன் துவங்கி, நிறைவடைந்தது. நேற்று காலை, காலை, 6:45 முதல், 7:00மணிக்குள் கோபுர கலசம் மற்றும் மூலவருக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. பேரூராதினம் இளைய பட்டம் மருதாசல அடிகள், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமி, தென்சேரிமலை திருநாவுக்கரசர் நந்தவன திருமட முத்து சிவராமசாமி அடிகள் கும்பாபிஷேகத்தை நடத்தினர்.
கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, கடலுார் மாவட்ட மக்களின் நலனுக்காக, சிறப்பு பிரார்த்தனை மற்றும் வேள்வி பூஜைகள் நடந்தன. மேலும், அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக, கோவில் அறக்கட்டளை தலைவர் கண்ணன், மூன்று சென்ட் வீதம், ஏழு பேருக்கு, வீட்டுமனை பட்டா வழங்கினார். விழாவுக்கு, உள்ளாட்சி மற்றும் நீதித்துறை அமைச்சர் வேலுமணி, தலைமை வகித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர்.