சிற்ப சாஸ்திர ஆகம விதிப்படி புதைபொருள் சிலைகளை வழிபட வேண்டாம்!
ராமநாதபுரம்: சிற்ப சாஸ்திர ஆகம விதிப்படி, புதைபொருளாக கண்டுபிடிக்கப்படும் எந்த வகை சிலைகளையும் வழிப்பட கூடாது என, அருங்காட்சியகத்துறை தெரிவித்துள்ளது. சிந்துசமவெளி நாகரிகத்தை ஆய்வு செய்த இந்திய தொல்பொருள் ஆய்வாளர் சர் ஜான்மார்ஷல் சிற்ப கலை இந்தியர்களின் கலை, என தெரிவித்தார். சிந்துசமவெளி நாகரிகத்தில் இருந்தே கற்சிலைகள் வடிவமைக்கப்பட்டன. அவர்கள் முதலில் சிலைகளை லிங்கம், நந்தி வடிவில் உருவாக்கினர். பின் பறவை, விலங்குகளாக வடிவமைத்தனர். அந்த சிலைகளின் உடல் உறுப்புகள் தனித்தனியாக செய்யப்பட்டு இணைக்கும் வகையில் இருந்தன.இதற்காக சிலைகளில் துளைகள் இடப்படுவது வழக்கம்.
6 ம் நுாற்றாண்டுக்கு பின்பே சிலைகள் முழுமையாக வடிவமைக்கப்பட்டன. சிலையின் ஆடை, ஆபரணங்கள் நுணுக்கமாக இருந்தன. பல்லவர்கள் காலத்தில் கற்சிலைகள் குறைவாக உருவாக்கப்பட்டன. இதனால் வேலைப்பாடுகள் சிறப்பாக இருந்தது. 12 ம் நுாற்றாண்டுக்கு பின் அதிகளவில் சிலைகள் செய்யப்பட்டன. தேவியர்களுக்கும் ஏராளமான
சிலைகள் வடிவமைக்கப்பட்டன. 19 ம் நுாற்றாண்டில் இருந்து சிலைகளின் வேலைப்பாடு
நுணுக்கம் குறைய துவங்கியது.இதனால் புதைபொருளாக கிடைக்கும் பழங்கால சிலைகளை பலர் பொக்கிஷமாக கருதுகின்றனர். அவற்றை சிலர் வழிபாடும் செய்கின்றனர். ஆனால் சிற்ப
சாஸ்திரம் ஆகமவிதிப்படி, புதைபொருளாக எடுக்கப்படும் சிலைகளை வழிபட கூடாது என,
அருங்காட்சியகத்துறை தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் அருங்காட்சியக காப்பாட்சியர் என்.சவுந்திரபாண்டியன் கூறியதாவது: கற்சிலைகள் ஆரம்பத்தில் வெள்ளை, பழுப்பு, மணல்கற்களில் தயாரிக்கப்பட்டன. 12 ம் நுாற்றாண்டுக்கு பின்பே கருங்கற்களில் வடிவமைக்கப்பட்டன.கற்சிலைகள் கோயில்களில் மூலவராகவும், ஐம்பொன் சிலைகள் உற்சவராகவும் இருக்கும். புதைபொருளாக கிடைக்கும் எந்த வகை சிலைகளையும் பூஜிக்க கூடாது. அவற்றை அருங்காட்சியகங்களில் ஒப்படைக்க வேண்டும். கற்சிற்பங்களில் எண்ணெய் தேய்க்க கூடாது. திருநீர், சந்தன அபிஷேகம் செய்யலாம். சேதமடைந்த சிலைகளை நீர்நிலைகளில் துாக்கி எறிய கூடாது, என்றார்.