ஜலசமாதியான தனுஷ்கோடி புத்துயிர் பெறுகிறது!
ராமேஸ்வரம்: 1964ம் ஆண்டு இதே நாளில் வங்க கடலில் உருவான புயல் தாக்கியதில் ஜல சமாதியான தனுஷ்கோடி, 51 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் மெல்ல, மெல்ல புத்துயிர் பெறுகிறது. இலங்கையில் சிறை வைக்கப்பட்ட சீதையை மீட்புதற்காக ராவணனை வதம் செய்த ராமபிரான் எய்த அம்பு விழுந்த இடம் தனுஷ்கோடி என, ராமாயணத்தில் கூறப்பட்டு உள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து 18 கி.மீ., துாரத்தில் இந்தியாவின் தென்கிழக்கு எல்லையில் தனுஷ்கோடி உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியின்போது சிறந்த வணிக நகரமாக விளங்கியது. தனுஷ்கோடியில் இருந்து இலங்கை தலைமன்னாருக்கு, இர்வின், கோஷன் என்ற பெயர்களில் கப்பல் போக்குவரத்து நடந்தது. சென்னை முதல் தனுஷ்கோடி வரை போர்ட் மெயில் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் இருந்தது.
ஆங்கிலேயர் ஆட்சிக்கு பின் இவை இரண்டும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வந்தது. தனுஷ்கோடியில் புனித நீராடினால் பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.இத்தகைய சிறப்புகளை தன்னகத்தே கொண்ட தனுஷ்கோடி, 1964ம் ஆண்டு டிச., 22 நள்ளிரவு வங்ககடலில் உருவான புயலின் கோரதாண்டவத்தால் முற்றிலும் அழிந்தது. வீடுகளுக்குள் துாங்கிக்கொண்டிருந்த மீனவர்கள், சுற்றுலா பயணிகள், மாணவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஜலசமாதி ஆனார்கள். ரயில்வே ஸ்டேஷன், தபால் அலுவலகம், கோயில்கள், சர்ச், தங்கும் விடுதி என அனைத்து கட்டடங்களும் தரைமட்டமானது. இதனை தேசிய பேரிடராகவும், மனிதர்கள் வாழ தகுதி அற்ற பகுதியாகவும் மத்திய அரசு அறிவித்தது.
அன்று முதல் இன்று வரை மின்சாரம், குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி தனுஷ்கோடி தனி தீவாக உள்ளது. இருந்தும் புண்ணிய பூமி என்பதால் தனுஷ்கோடியை பார்வையிட சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். இவர்களால் அங்குள்ள சிதைந்த கட்டடங்களை மட்டுமே பார்க்க முடிகிறது. இந்நிலையில் 51 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் தனுஷ்கோடி மெல்ல, மெல்ல புத்துயிர் பெற்றுவருகிறது. முதற்கட்டமாக ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக மத்திய அரசு ரூ. 37 கோடி ஒதுக்கி உள்ளது. இதுவரை 50 சதவீத பணிகள் முடிந்துள்ளது. தனுஷ்கோடி- இலங்கை தலைமன்னார் இடையே ரூ.23 ஆயிரம் கோடி செலவில் பாலம் அமைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
புயலின் தாக்கம் குறித்து ராமேஸ்வரம் கே.பி.அம்பிகாபதி, 74, கூறியதாவது:1964, டிச. 22 தேதி செவ்வாய் காலை முதல் தனுஷ்கோடி, ராமேஸ்வரத்தில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. அன்று நள்ளிரவு 12. 30 மணிக்கு தனுஷ்கோடியை புயல் தாக்கியதால் கட்டடங்கள் இடிந்து கடலுக்குள் மூழ்கின. அப்போது சிக்னலுக்கு காத்திருந்த ரயிலும் மூழ்கியது, அதனுள் இருந்த பெங்களூரு கல்லுாரி மாணவர்கள் கடலில் மூழ்கி இறந்தனர். கடற்கரை பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மனித சடலங்களையே காண முடிந்தது பலர் மணல் திட்டில் ஏறி நின்றும், பனை மரங்களை பிடித்து கொண்டும் உயிர் தப்பினர். அதன் தாக்கம் ராமேஸ்வரத்திலும் இருந்தது. குடியிருப்பு பகுதிகளை கடல் நீர் சூழ்ந்ததால் உயிர் பிழைப்பதற்காக மக்கள் கட்டடங்களின் மாடிகளில் தஞ்சமடைந்தனர். 51 ஆண்டுக்கு முன்பு நிகழ்ந்த புயலின் கோர தாண்டவத்தை நினைத்தாலே உடல் சிலிர்க்கிறது, என்றார்.