மூக்குப்பொடி சித்தரைக் காண வெளி மாநில பக்தர்கள் வருகை!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள, மூக்குப்பொடி சித்தரைக் காண, வெளி மாநில பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். திருவண்ணாமலையில் எண்ணற்ற மகான்கள், சித்தர்கள், ஞானிகள் ரூபமாகவும், அரூபமாகவும் வாழ்ந்து வருவதாக தல புராணங்கள் கூறுகின்றன. கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன், சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் சுவாமிகள் என்பவர், கிரிவலப்பாதையில், அடி அண்ணாமலை பகுதியில் கவுதம ஆசிரமம் பக்கத்தில் தியானம் மேற்கொண்டார். இவர் மூக்குப் பொடி போடும் பழக்கம் உடையவர். இதனால் ஆசீர்வாதம் வாங்கச் செல்லும் பக்தர்கள், மூக்குப்பொடி வாங்கிச் செல்வர். உள்ளூர் ஓட்டல் தொழிலதிபர், வெளி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் என, பலர் அவரிடம் ஆசீர்வாதம் வாங்கச் செல்வர். சில நேரங்களில், ஆசீர்வாதம் வாங்கச் செல்லும் பக்தர்களை கையில் கிடைத்த பொருளைக் கொண்டு அடிப்பார். அவரிடம் அடி வாங்கினால், கர்மா தொலைந்து, நல்லது நடப்பதாக பக்தர்களிடம் நம்பிக்கை உள்ளது. இந்நிலையில், உள்ளூர் தொழிலதிபர் நடத்தும் நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஓட்டலுக்கு மூக்குப் பொடி சாமியார் செல்வார். அங்கு நேரடியாக கல்லா பெட்டியை திறந்து, அவருக்கு கைக்கு வந்த பணத்தை அப்படியே எடுத்து செல்வார். அங்குள்ள ஊழியர்கள் உள்பட யாரும் அவரை தடுக்க மாட்டார்கள். பின்னர் அந்த பணத்தை பக்தர்களுக்கோ, அல்லது அவர் கிரிவலம் வர அழைத்துச் செல்லும் ஆட்டோ டிரைவருக்கோ கொடுப்பார். இது போன்ற செயல் தொடர்ந்து நடந்து வருகிறது. அவர் எங்காவது செல்ல வேண்டும் என, நினைத்தால், அவரை அழைத்துச் செல்வதற்காக வெளி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள், டிரைவரை நியமித்து, ஒரு காரை அவர் இருக்குமிடத்திலேயே நிறுத்தி வைத்துள்ளனர். ஆனால், அவர் அதில் ஏறாமல், ஏதாவது ஒரு ஆட்டோவில் ஏறி, கிரிவலம் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த சித்தர் கடந்த சில நாட்களாக சேஷாத்திரி சுவாமிகள் ஆஸ்ரமத்தில் தங்கியுள்ளார். மூக்குப்பொடி சித்தரைப் பற்றி, கர்நாடக மாநில, டிவி சேனல்களில் செய்தி வெளியானது. இதனால் ஏராளமான பக்தர்கள் அவரை காண வருகின்றனர்.