நரசிங்கபுரம் வரதராஜபெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறக்காததால் பக்தர்கள் அதிர்ச்சி
ஆத்தூர்: தி.மு.க., நகர செயலாளரின் தந்தைக்கு, நரசிங்கபுரம் வரதராஜபெருமாள் கோவிலில், முதல் மரியாதை வழங்குவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், நேற்று, சொர்க்கவாசல் கதவை திறக்காமல், கோவில் வழிப்பாதையை சொர்க்கவாசல் போல் அமைத்து, திறந்தனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, நரசிங்கபுரத்தில், மாரியம்மன், பிடாரி அம்மன், செல்லியம்மன், தர்மராஜர், வரதராஜபெருமாள் உள்பட, ஏழு கோவில்கள், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. தி.மு.க., நகர செயலாளர் வேல்முருகனின் தந்தை பழனிமுத்து, 20 ஆண்டுகளுக்கு மேலாக, கோவில் அறங்காவலராக இருந்து வந்தார். இவர், கோவில் நகை, சொத்துகளில் முறைகேடு செய்துள்ளதாக, பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, அறநிலையத்துறை அதிகாரிகள், ஆறு மாதங்களுக்கு முன், கோவில் நிர்வாக பொறுப்புகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, பூஜை செய்து வருகின்றனர். வைகுண்ட ஏகாதசி விழாவுக்கு, முதல் மரியாதை வழங்க வேண்டும் என, முன்னாள் அறங்காவலர் பழனிமுத்து கூறியுள்ளார். இது தொடர்பாக, நேற்று முன்தினம், ஆர்.டி.ஓ., ஜெயச்சந்திரன், இந்து அறநிலையத்துறை சேலம் உதவி ஆணையர் சபர்மதி ஆகியோர், கோவில் நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்களுடன், பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடன்பாடு ஏற்படாததால், இந்தாண்டு சொர்க்கவாசல் கதவு திறப்பதில்லை, முதல் மரியாதையும் யாருக்கும் வழங்கமாட்டோம் என, அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று, காலை, 5 மணியளவில், வரதராஜ பெருமாளுக்கு, சிறப்பு அபிஷேக பூஜை செய்தனர். சொர்க்கவாசல் கதவு திறக்கப்படாமல், கோவில் வழிப்பாதையை அறநிலையத்துறை அலுவலர்கள், சொர்க்கவாசல் போல் அமைத்து, வழிபாடு நடத்தினர்.வைகுண்ட ஏகாதசி நாளில், சொர்க்கவாசல் கதவு திறக்காததால், பக்தர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.