உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவில்களில் குவிந்த பக்தர்கள்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவில்களில் குவிந்த பக்தர்கள்

காரிமங்கலம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அதிகாலை நடந்த சொர்க்க வாசல் திறப்பு விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வைகுண்ட ஏகாதசியை ஒட்டி, காரிமங்கலம் அக்ரஹாரம் லட்சுமி நாராயண ஸ்வாமி கோவிலில், நேற்று அதிகாலை, 3.30 மணிக்கு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. 4.30 மணிக்கு, சொர்க்க வாசல் திறப்பு நடந்தது. இதில், லட்சுமி நாராயண ஸ்வாமி சிறப்பு அலங்காரத்தில், சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காரிமங்கலம் அடுத்த கோவிலூர் சென்ன கேசவ பெருமாள் கோவில், பிக்கனஹள்ளி சென்னகேசவ பெருமாள் கோவில், மோதூர் பெருமாள் கோவில், தர்மபுரி கோட்டை வரமஹாலட்சுமி சமேத பரவாசுதேவ ஸ்வாமி கோவில், அதகபாடி லட்சுமி நாராயண ஸ்வாமி கோவில், செட்டிக்கரை சென்றாய பெருமாள் கோவில், பழைய தர்மபுரி பெருமாள் கோவில், ஆட்டுகாரன்பட்டி ராதா கிருஷ்ணன் கோவில், அரூர் பழையப்பேட்டை ஸ்ரீகரிய பெருமாள் கோவில், மணியம்பாடி துளசியம்மாள், மங்கம்மாள் சமேத, வெங்கட்ரமண ஸ்வாமி கோவில் உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

* திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், வேணுகோபால் ஸ்வாமி சன்னதி, பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

* வேலூர் திருப்பதி- திருமலை தேவஸ்தான தகவல் மையத்தில் உள்ள ஏழுமலையான், வெள்ளி கலச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதேபோல், காவேரிப்பாக்கம் திருபாற்கடல் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், வேலூர் வேலப்பாடி வரதராஜ பெருமாள் கோவில் உட்பட பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

*ஓசூர் வெங்கடரமண ஸ்வாமி கோவில், கோபசந்திரம் தட்சின திருப்பதி கோவில், சூளகிரி, கெலமங்கலத்தில் உள்ள சென்னகேஸ்வர ஸ்வாமி கோவில், தேன்கனிக்கோட்டை பேட்ராய ஸ்வாமி கோவில், பாகலூர் அடுத்த சொக்கநாதபுரம் வேணுகோபால ஸ்வாமி கோவில், ஓசூர் ராம்நகரில் உள்ள கோதண்டராம கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமி கோவில் உட்பட பெருமாள் கோவில்களில் நேற்று சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ஏராளமானோர் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !