உள்ளூர் கோவில்களை அடிக்கடி தரிசிக்க வேண்டும்!
பெ.நா.பாளையம்: புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வந்தாலும், உள்ளூர் கோவில்களை அடிக்கடி தரிசிக்க வேண்டும்” என, ஆன்மிக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசினார்.மேட்டுப்பாளையம் ரோடு, கவுண்டர் மில்ஸ் அருகே உள்ள கொங்குநாடு கலை, அறிவியல் கல்லுாரியில், கோவை பக்தி சொற்பொழிவு மன்றம் சார்பில், வில்லிபாரதம் ஒரு மாத தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்து வருகிறது.அர்ஜூனன் தீர்த்த யாத்திரை என்ற தலைப்பில் திருச்சி கல்யாணராமன் பேசியதாவது: கங்கையில் நீராடி விட்டு, திருவேங்கடத்தை (திருப்பதி) தரிசனம் செய்தால், புண்ணியம் கிட்டும் என்பது மரபு. திருப்பதி மலையை ஆதிசேஷன் தாங்குகிறார். அர்ஜூனன், திருவேங்கட கடவுளிடம் வேண்டும் போது, நான் பாவம் செய்து பாவி ஆனேன். என் பாவத்தை போக்க வந்துள்ளேன். பால பருவத்தில் பெற்றோருக்கு தீங்கு இழைத்தேன்.
பெரியவன் ஆன பிறகு சம்பந்தம் இல்லாதவருக்கு உழைத்து, வாழ்க்கையை வீண் செய்தேன். திருப்பதி பெருமாளே! நீ தான் எனக்கு அருள் செய்ய வேண்டும் என வேண்டுகிறார். சென்னை, பல புண்ணிய ஸ்தலங்கள் கொண்ட புண்ணிய பூமி. வள்ளலார் இந்நகரத்தை தருமமிகு சென்னை என்கிறார். இப்போது அங்கு, லட்சக்கணக்கானோர் தஞ்சம் அடைந்து, வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், வில்லிவாக்கம், திருநீர்மலை, கோயம்பேடு, வடபழனி, திருநின்றவூர், திருவள்ளூர், திருவெற்றியூர், திருப்புனவாசல் போன்ற பல புண்ணிய ஷேத்திரங்கள் உள்ளன. பல ஆழ்வார்கள், நாயன்மார்கள், அருணகிரிநாதர், ராமலிங்க வள்ளலார் உள்ளிட்ட பலரால் பாடல் பெற்ற புண்ணிய பூமியாக சென்னை காட்சியளிக்கிறது. நாம், நகரத்திலே உள்ள கோவில்களை மட்டும் வழிபாடு செய்தால் போதாது. கிராமத்தில் உள்ள கோவில்களையும் வழிபாடு செய்ய வேண்டும். புண்ணிய ஷேத்திரங்களுக்கும், பிரசித்தி பெற்ற கோவில்களுக்கும் சென்று வருவதோடு, உள்ளூர் கோவில்களுக்கும் அடிக்கடி செல்ல வேண்டும். கிராமங்களில்தான் இந்தியா உள்ளது என்ற மகாத்மா காந்தியின் கருத்துக்கு ஏற்ற வகையில் கிராமங்களில் உள்ள கோவில்களுக்கு பக்தர்கள் அடிக்கடி சென்று வர வேண்டும். இவ்வாறு, ஆன்மிக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசினார்.