உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அப்பிச்சிமார் கோவில் கல்வெட்டு:சமூக ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு

அப்பிச்சிமார் கோவில் கல்வெட்டு:சமூக ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு

அவிநாசி: கோவை மாவட்டம், அன்னுார் அருகே உள்ள கோவில் கல்வெட்டு, அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையாக வாழ்ந்ததை எடுத்துக்காட்டுகிறது. கோவையை சேர்ந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுந்தரம், அவிநாசியை சேர்ந்த கல்வெட்டு வரலாற்று ஆர்வலர் ஜெயசங்கர் ஆகியோர், அன்னுார் அருகே தாசபாளையத்தில் உள்ள, கல்வெட்டு குறித்து ஆய்வு நடத்தினர். அங்குள்ள, அப்பிச்சிமார் கோவிலில் உள்ள கல்வெட்டு குறித்து, அவர்கள் கூறியதாவது: ஆந்தை குல வேளாளர் குலத்தை, சேர்ந்தவர்கள் வழிபடும் அப்பிச்சிமார் கோவில், கிராம மக்கள் அனைவருமே, வழிபடும் கோவிலாக விளங்கியுள்ளது. விளக்குத்துாண் சுற்றுப்புறச்சுவர் அருகே, சாய்த்து வைக்கப்பட்டுள்ள நிலையில் பலகை கல்வெட்டு காணப்படுகிறது.

அதில், ருத்ரோத்காரி வருடம், பங்குனி மாதம், ஐந்தாம் தேதியன்று தாசபாளையத்தை சேர்ந்த பழநித்தேவன் என்பவரது மகன் குட்டித்தேவன், அப்பிச்சி ஆண்டவனுக்கு மடப்பள்ளி கட்டி வைத்தார் என, குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் ஆண்டுகளின் வட்டத்தில், ருத்ரோத்காரி ஆண்டு, 1923ல் வருகிறது. அதிலிருந்து அறுபது ஆண்டுகளுக்கு முன் கணக்கிட்டால், அதாவது, 1863ல் கல்வெட்டு எழுதப்பட்டிருக்கலாம். குறிப்புகள் தெளிவாக இல்லை. அப்பிச்சிமார் கோவில், பெரும்பாலும் வெள்ளாளர்கள் வழிபடும் கோவிலாக அமைந்துள்ளது.குட்டித்தேவன் என்பவர், கோவிலுக்கு மடப்பள்ளி (சமையற்கூடம்) கட்டித்தந்துள்ளார் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அக்காலத்தில், இறைபணி விஷயத்தில், அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் ஒற்றுமையாக இருந்துள்ளனர் என்பதையே, இக்கல்வெட்டில் உள்ள செய்தி, நமக்கு கூறுகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !