ஆரியங்காவு தர்மசாஸ்தாவுக்கு நிச்சயதார்த்தம்!
ஆரியங்காவு: கேரள மாநிலம் ஆரியங்காவு தர்மசாஸ்தா - புஷ்கலாதேவி திருக்கல்யாண நிச்சயதார்த்தம் நேற்று இரவு 9.15 மணிக்கு நடந்தது. மங்கல குலவை முழங்க இன்று இரவு 10.00 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. உலக நலனுக்காக ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயிலில் பாரம்பரிய வழக்கத்துடன் திருக்கல்யாண வைபவம் மார்கழியில் நடக்கிறது. சம்பந்தி’ முறை சவுராஷ்டிர சமூகத்தை சேர்ந்த புஷ்கலாதேவியை மணந்து தர்மசாஸ்தா, ஆரியங்காவில் அன்னதானப்பிரபுவாக காட்சி தருகிறார். இதனால் திருவாங்கூர் மன்னர் வாரிசுகளுக்கு, சவுராஷ்டிர சமூகத்தினர் சம்பந்தி’ முறை என்ற வழக்கம் உள்ளது.
சவுராஷ்டிரா சமூகத்தினர் ஆரியங்காவு தேவஸ்தான சவுராஷ்டிரா மகாஜன சங்கம் மதுரை’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, திருக்கல்யாண வைபவத்தில் பங்கேற்கின்றனர். வைபவத்தை முன்னிட்டு நேற்றுமுன்தினம், மாம்பழத்துறை புஷ்கலா தேவியின் ஜோதி சொரூப’ ஊர்வலம் நடந்தது. ஆரியங்காவில் தர்மசாஸ்தா ஜோதியுடன், புஷ்கலாதேவியின் ஜோதி சொரூபம் ஐக்கியமானது. பாண்டியன் முடிப்பு’ பாண்டியன் முடிப்பு’ எனும் நிச்சயதார்த்தத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு தர்மசாஸ்தாவுக்கு பூஜைகள் நடந்தன. காலை 9.00 மணிக்கு சுவாமி, பச்சைக்குதிரை வாகனத்தில் வீதி உலா, மதியம் 12 மணிக்கு சந்தன அபிஷேகம், மதியம் 12.30 மணிக்கு சம்பந்தி விருந்து, மதியம் 1.00 மணிக்கு அன்னதானம் நடந்தது. மாலை 4.00 மணிக்கு தாலிப்பொலி ஊர்வலம் எனும் மாப்பிள்ளை ஊர்வலம்’ பாரம்பரிய முறைப்படி நடந்தது. கேரள பெண்கள், குழந்தைகள் குருத்தோலை, மங்கலவிளக்கு ஏந்திவர, யானை மீது சுவாமி வந்தார். இரவு 9.15 மணிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. சுவாமி சார்பில் தேவஸ்வம் போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன், அம்பாள் சார்பில் சவுராஷ்டிர சங்க தலைவர் கே.ஆர்.ராகவன் ஆகியோர் தாம்பூல பண முடிப்பை மாற்றிக் கொண்டனர். பொதுக்காரியதரிசி எஸ்.ஜெ.ராஜன் சடங்குகளை நடத்தி வைத்தார். அகில இந்திய சவுராஷ்டிரா மத்திய சபா தலைவர் டி.டி.ஈஸ்வரமூர்த்தி, பொதுச் செயலாளர் ராமசுப்பிரமணியன், ஒருங்கிணைப்பாளர் டி.டி.சாந்தமூர்த்தி கலந்து கொண்டனர். பின், சம்பந்தி விருந்து, அன்னதானம் நடந்தது. முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் இன்று இரவு 10.00 மணிக்கு நடக்கிறது.