திருப்பூரில் கிறிஸ்துமஸ் விழா கூட்டு பிரார்த்தனை
திருப்பூர்: திருப்பூரில் உள்ள சர்ச்களில், கிறிஸ்துமஸ் விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிறிஸ்து பிறந்த தினம், அன்பின் விழாவாக கொண்டாடப்படுகிறது. ஏசு பிறப்பை வரவேற்கும் விதமாக, ஒரு வாரமாக, தேவாலயங்கள் மின்விளக்குகளால் அலங்கரிகப்பட்டிருந்தன. திருப்பூர் குமரன் ரோடு கத்ரீனாள் ஆலயம், அவிநாசி ரோடு சி.எஸ்.ஐ., சர்ச், குமார் நகர் சூசையப்பர் புனித ஆலயம், நல்லூர் சி.எஸ்.ஐ., சர்ச் <உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட தேவாலயங்களில், கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.சர்ச்களில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணிக்கு, அலங்கார குடில் அமைத்து, மாட்டுத்தொழுவத்தில் குழந்தை ஏசு சொரூபத்தை வைத்து, பிரார்த்தனை நடத்தப்பட்டது. பாதிரியார் தலைமையில், திருப்பலி பூஜை நடந்தது. ஏசு பிறப்பை வரவேற்கும் பாடல்கள் இசைக்கப்பட்டன. பைபிள் வாசிக்கப்பட்டு, கூட்டு பிரார்த்தனை நடந்தது.காணிக்கை பவனி நிகழ்ச்சியில், நிதி வசூலிக்கப்பட்டது. இத்தொகை, ஏசு பிறந்த ஜெருசலேம், பெத்தலகேமுக்கு அனுப்பப்படும். அடுத்து நடந்த திருவிருந்து பவனியில், அப்பம் வழங்கப்பட்டது. பின், ஆசீர்வாத நிகழ்ச்சி நடந்தது. நள்ளிரவில் துவங்கி, நேற்று மதியம் வரை நீடித்த சிறப்பு பிரார்த்தனையில், ஏராளமானோர் பங்கேற்றனர்.
அவிநாசி: அவிநாசி இஸ்மாயில் வீதியில் உள்ள சி.எஸ்.ஐ., தேவாலயத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு, கலைநிகழ்ச்சி, சிறப்பு திருப்பலி நடைபெற்றது. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, ஆயர் எட்வின் ராஜ்குமார் தலைமையில், ஆராதனை ஜெபம் நடைபெற்றது. அதன்பின் நடந்த சிறப்பு பிரார்த்தனையில், கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். அப்பம், திராட்சை சாறு ஆகியன, கிறிஸ்துமஸ் விருந்தளிக்கப்பட்டது. அவிநாசி - சேவூர் ரோட்டில் உள்ள புனித அந்தோணியர் ஆலயத்திலும், கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து, ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.