உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரமலான் சிந்தனைகள்- 5 : பாவம் தீர்க்கும் நோன்பு

ரமலான் சிந்தனைகள்- 5 : பாவம் தீர்க்கும் நோன்பு

பாவம் தீர்க்கும் நோன்பு

அல்லாஹ் குறிப்பிட்ட சில மாதங்களையும், நாட்களையும் சிறப்பாக அமைத்துள்ளான். அவன் உயர்வாக கருதும் மாதங்களில் ஒன்று ரமலான். பாவ மன்னிப்பு பெறுதல், கடவுளுக்கு பயப்படுதல், பண்பாடு மாற்றம் போன்ற நல்ல பலன்களை உருவாக்குவதில், ரமலான் மாதத்திற்கு பங்கு இருக்கிறது. இறைவன் இதற்காக பல வழிகளை காட்டியுள்ளான்.

கடவுள் மீது பயம் இருக்க வேண்டியது ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய கட்டாயமான பண்பாகும். ரமலானின் நோக்கமே, இந்தப் பண்பை நம்மிடம் வளர்ப்பது தான். அதற்கான பயிற்சியை இந்த மாதம் முழுமையாக அளிக்கிறது.
உடல் தேவைகளுக்கும், உணர்வுகளுக்கும் முடிச்சுப்போட்டு மனிதனை வதைப்பதை இறைவன் விரும்புவதே இல்லை. ""அல்லாஹ் உங்களுக்கு இலகுவையே விரும்புகிறான். கஷ்டத்தை கொடுக்க விரும்பவில்லை என்கிறது குர் ஆன்.
அதேநேரம் நோன்பின் போது பசி, தாகம் ஆகியவற்றை ஒவ்வொரு நோன்பாளியும் அனுபவிக்கிறார்கள். இதுவும் இறைவன் கொடுக்கும் கஷ்டம் தானே என பொருள் கொள்ளக்கூடாது.

ஒரு நோன்பாளி தனக்குள் இறைபயத்தை வளர்த்துக் கொள்வதை நோக்கமாகக் கொண்டு பசியையும், தாகத்தையும் அனுபவிக்கிறார். நோன்பின் போது ஏதாவது பாவங்கள் செசய்ய நேர்ந்தால், "இப்போது நோன்பு இருக்கிறோம், இந்த நேரத்தில் பாவம் செசய்வது தவறு என்ற எண்ணம் உருவாகும். அந்த நேரத்தில் அல்லாஹ்வின் நினைவும் மனிதனுக்கு ஏற்படுகிறது. எனவே பாவங்களிலிருந்து நோன்பு மனிதனை காப்பாற்றுகிறது.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.47 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.31மணி

11 ஆண்டுகளாக ரமலான் நோன்பு நோற்கும் இந்து

கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில், லேத் பட்டறை நடத்தி வரும் ராதாகிருஷ்ணன், 11 ஆண்டுகளாக ரமலான் நோன்பு இருந்து வருகிறார். கீழக்கரை அன்பு நகரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(65). இவர், போஸ்ட் ஆபீஸ் தெருவில் லேத் பட்டறை வைத்து நடத்துகிறார்.இவருக்கு மனைவி மற்றும் ஆறு பிள்ளைகள் உள்ளனர். சமூக நல சேவை இயக்க செயலர்.

இவர் கூறியதாவது: கீழக்கரையைச் சேர்ந்த, மறைந்த அரசியல் பிரமுகருக்கும், எனக்கும் கடந்த 2000ல் ரம்லான் நோன்பு கடைபிடிப்பது தொடர்பாக போட்டி ஏற்பட்டது. அந்த ஆண்டு நோன்பு நூற்றேன். அதன்பின் தொடர்ந்து ஆண்டுதோறும் முழுமையாக நோன்பு கடை பிடித்து வருகிறேன். இதற்காக அதிகாலையில், எனக்காக எனது மனைவி உணவு தயார் செய்து தருகிறார். நண்பர்கள் அழைத்த போதும் பணிபளுக் காரணமாக பள்ளிவாசல் செல்ல முடியவில்லை. எனது பட்டறையில், முஸ்லிம் நண்பர்களுடன் இணைந்து நோன்பு திறந்து வருகிறேன். இதில் மன திருப்தி ஏற்படுவதுடன், மக்களிடையே நல்லிணக்கமும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !