உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் மண்டல பூஜை நிறைவு: 30ல் நடை திறப்பு!

சபரிமலையில் மண்டல பூஜை நிறைவு: 30ல் நடை திறப்பு!

சபரிமலை:  சபரிமலையில் மண்டல கால பூஜைகள் நிறைவு பெற்று நேற்று இரவு நடை அடைக்கப்பட்டது. இனி மகரவிளக்கு  பூஜைகளுக்காக 30 -ம் தேதி மாலை திறக்கும். ஜன.,18 வரை நெய்யபிஷேகம் நடைபெறும். சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல  காலம் கடந்த நவ., 17-ம் தேதி தொடங்கியது. அன்று முதல் தொடர்ச்சியாக 41 நாட்கள் பூஜைகள் நடைபெற்று நேற்று நிறைவாக  மண்டல பூஜை நடைபெற்றது. இந்த நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்க திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் வழங்கிய தங்க அங்கி  கடந்த 26-ம் தேதி மாலை சன்னிதானம் வந்தது. தொடர்ந்து அங்கி அணிவித்து தீபாராதனை நடைபெற்றது.

நேற்று நிறைவு நிகழ்ச்சியாக மண்டல பூஜை நடைபெற்றது. அதிகாலை மூன்று மணிக்கு நடை திறந்த பின்னர் 3.15 மணிக்கு  தொடங்கிய நெய்யபிஷேகம் 9.45 மணிக்கு நிறைவு பெற்றது. அதன் பின்னர் மண்டலபூஜைக்கான ஏற்பாடுகள் தொடங்கியது. கோயில்  முன்புறம் உள்ள மண்டபத்தில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு கலசபூஜை நடத்தி, பிரம்ம கலசத்தில் களபம் நிறைக்கப்பட்டது.  தொடர்ந்து அந்த கலசத்தை மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி எடுக்க, மேளதாளம் முழங்க கோயிலை சுற்றி பவனி வந்தது. பின்னர்  ஸ்ரீகோயிலுக்குள் கொண்டு சென்று ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்த பின்னர் மண்டலபூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள்  கலந்து கொண்டனர். மாலையில் நான்கு மணிக்கு நடை திறந்து இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்பட்டது. அதன் பின்னர் பக்தர்கள்  பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படவில்லை. மகரவிளக்குக்கான ஏற்பாடுகள் இனி வரும் மூன்று நாட்கள்  நடைபெறும்.

நடை திறப்பு: மகரவிளக்கு கால பூஜைகளுக்காக மீண்டும் 30-ம் தேதி மாலை ஐந்து மணிக்கு திறக்கும். அன்று வேறு பூஜைகள் எதுவும்  கிடையாது. இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும். 31-ம் தேதி அதிகாலை மூன்று மணிக்கு நடை திறந்து 3.15 மணிக்கு  நெய்யபிஷேகம் தொடங்கும். ஜன., 15-ம் தேதி மகரஜோதி விழா நடக்கிறது. 18-ம் தேதி காலை 11மணி வரை நெய்யபிஷேகம்  நடைபெறும். அதன் பின்னர் வரும் பக்தர்கள் நெய்யபிஷேகம் செய்ய முடியாது. 19-ம் தேதி மாளிகைப்புறத்தில் குருதிபூஜை நடைபெறும்.  20-ம் தேதி காலை ஏழு மணிக்கு நடை அடைக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !