ஆன்மிக பின்னணியில் தான் தன்னலமற்ற சேவை செய்ய முடியும்
காஞ்சிபுரம்:ஆன்மிக பின்னணியில் தான் தன்னலமற்ற சேவை செய்யமுடியும், என, ராமகிருஷ்ணர், சாரதாதேவி, சுவாமி விவேகானந்தர் பக்தர்களின் இரண்டாம் நாள் மாநாட்டில், வித்யா விவேகபிரியா அம்பா அவர்கள் பேசினார். காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டையில், ராமகிருஷ்ணர், சாரதாதேவி, சுவாமி விவேகானந்தர் பக்தர்களின், 23வது, மூன்று நாள் மாநாடு நேற்று முன்தினம் வெகு விமர்சையாக துவங்கியது. அதைத்தொடர்ந்து நேற்று காலை, 6:00 மணிக்கு தேவார இன்னிசையோடு மாநாடு துவங்கியது.
தவமுக சேவையும் முக்கியம்: தொடர்ந்து சாரதாதேவியின் சேவை மற்றும் அவரை பற்றிய தகவல்களோடு, பஜனை, கலந்துரையாடல், சொற்பொழிவு, கிராமிய நடனம், கருத்தரங்கம், பொம்மலாட்டம், நாட்டிய நாடகம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. இதற்கிடையே உளுந்துார்பேட்டையில் ஸ்ரீ சாரதா ஆசிரம செயலர் வித்யா விவேகபிரியா அம்பா தலைமையில் அன்னை சாரதாதேவியின் வாழ்க்கையில் விஞ்சி நிற்பது தவமா? சேவையா? என்ற கருத்தரங்கம் நடைபெற்றது.
அதில், பச்சையப்பன் மகளிர் கல்லுாரி மாணவிகள், சாரதாதேவியின் வாழ்க்கையின் தவம் மற்றும் சேவை குறித்து விரிவாக பேசினர். இதையடுத்து வித்யா விவேக பிரியா அம்பா அவர்கள் பேசியதாவது: சாரதா தேவியின் வாழ்க்கையில் தவம் மற்றும் சேவை இரண்டுமே முக்கியமானதாகும். தவத்திலிருந்து தான் தன்னலமற்ற சேவை வருகின்றது என்றும், சாரதா தேவியார் எளிய, ஆனால் உயரிய வாழ்க்கை வாழ்ந்ததால், தன் வாழ்வின் ஒவ்வொரு செயலையும் ஆன்மிக மயமாக்கினார் என்றும், ஆன்மிகப் பின்னணியில் தான் தன்னலமற்ற சேவை செய்யமுடியும் என்றும் கூறியுள்ளார்.
விட்டு கொடுத்து...: சென்னையில் சமீபத்திய வெள்ளத்தில் சிக்கிய ஒருவருக்கு, நான்கு நாட்களாக உணவு வரவில்லை. வந்தபோதும் அவருக்கு கிடைக்கவில்லை. உணவு கிடைத்த ஒரு ஏழை பெண்மணி தன் உணவை அவருக்கு விட்டுக்கொடுத்து, எனக்கு உணவில்லாமல் இருந்து பழக்கம். உங்களுக்கு இல்லை என்று கூறினார். இது அவர் சுயநலமற்ற தவத்தின் வெளிப்பாடு. காட்டில் செய்தால் தான் தவம் என்று இல்லை. தன்னலமின்மையே பெரிய தவம். எனவே, சேவையும் தவமும் ஒன்றோடொன்று தொடர்புடையது.இவ்வாறு அவர் பேசினார்.