திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் சூரன் சிலைகள் தயார்
திருவாடானை: திருவாடானை கோயிலில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு சூரனை வதம் செய்வதற்காக சிலைகள் தயாராகிறது.திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் முருகன் சன்னதியில் கந்தசஷ்டி விழா நடந்து வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வாக சூரனை, முருகன் வதம் செய்யும் நிகழ்ச்சி வரும் அக்.,27 நடக்கிறது. இதற்காக சூரன் சிலையை புதுப்பித்து வர்ணம் பூசும் பணிகள் நடக்கிறது. இது குறித்து சிவாச்சாரியார்கள் கூறியதாவது: சூரபத்மன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் செய்து பெண்ணின் வயிற்றில் பிறக்காத குழந்தையால் மட்டுமே மரணம் எற்பட வேண்டும் என்ற அரிய தவத்தை பெற்றான். இந்த வரத்தின் பலத்தால் தேவர்களை துன்புறுத்தினான். தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களை காக்கும் நோக்குடன் சிவன் தனது நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளை உண்டாக்கி முருகனை உருவாக்கினார். முருகனே பெண்ணின் வயிற்றில் பிறக்காத தெய்வக் குழந்தை. அதனை தொடர்ந்து நடந்த போரில் ஞானவேலை வீசி சூரபத்மனை வதம் செய்தார். இந்நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெறும். திருவாடானையில் அக்.,27 மாலை 5:00 மணிக்கு சூரசம்ஹாரம், அதனை தொடர்ந்து திருக்கல்யாணம் நடைபெறும் என்றனர்.