இயற்கை அன்னை நமக்கு அருளட்டும்!
கடந்த ஆண்டில் கடும் மழை பெய்து தமிழகம் பாதிப்புக்குள்ளானது. இயற்கையின் விளையாட்டு இது என்றாலும், எதனால் இயற்கை நம்மைத் தண்டித்தது என்பதை உணர்ந்து அதற்கேற்ற ஆன்மிக நடைமுறைகளை வகுத்துக் கொள்வோம்.
*நீர்நிலைகளில் மீண்டும் ஆடிப்பெருக்கு, தை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் சிறுவீட்டுப் பொங்கல் ஆகியவற்றைக் கொண்டாட ஏற்பாடு செய்ய வேண்டும். நதிகள், ஏரிகளுக்கு பூஜை செய்ய வேண்டும்.
*நம் வீட்டு குப்பையை கண்ட இடங்களில் வீசி எறியாமல், சுகாதார ஊழியர்கள் வரும் போது அவர்கள் கொண்டு வரும் வாகனங்களில் ஒப்படைப்போம்.
*நம் வீட்டு திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள், அன்றாட <உபயோகத்திற்கு பிளாஸ்டிக் பைகளை அறவே தவிர்க்க வேண்டும். வியாபாரிகள் துணிப்பைகளை மக்களுக்கு வழங்க உறுதியேற்க வேண்டும்.
*முதியோர் இல்லங்களில் வசிக்கும் பெற்றோரை வீட்டுக்கு அழைத்து வருவோம். அவர்களுக்கு செய்த பாவத்திற்கு பரிகாரம் செய்ய வேண்டும்.
*‘டிவி’ தொடர்களை அறவே தவிர்ப்போம். மாலையில் விளக்கேற்றும் நேரத்தில் நம் வீட்டில் அழுகை சத்தம் கேட்டால் இயற்கை அன்னைக்கு அறவே பிடிக்காது. மீண்டும் தண்டிக்க வருவாள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
*எல்லாருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொள்வோம். பெருநகரங்களில் வசிப்பவர்கள் கிராமத்து மக்களைப் போல், பக்கத்து வீட்டில் உள்ளவர்களுடன் உறவு கொள்வோம். அவர்கள் யார் என்று கூட தெரியாத நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
*முதலில் நம்மை மாற்றுவோம். பிறகு, இயற்கை தன் நிலையை மாற்றிக் கொள்ளும்.