தன்னம்பிக்கை ஒன்றே போதும் எல்லா நன்மையும் வந்து சேரும்!
*தன்னம்பிக்கையும், உறுதியும் பூரணமாக அமைந்து விட்டால், உலகிலுள்ள எல்லா நல்ல விஷயங்களும் உங்களிடம் இருந்த மாதிரி தான்.
*யாரும் உங்களுக்கு அந்நியமானவர் அல்ல. அன்பினால் உலகம் முழுவதையும் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்.
*மன அமைதி பெற விரும்பினால், பிறரைக் குறை சொல்லாதீர்கள். மாறாக உங்கள் மீதுள்ள குறைகளைப் போக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள்.
*கடவுள் மீது பக்தி செலுத்தினால் துன்பம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது. கடவுளை நேசிப்பவர் எவரோ அவரே புண்ணியவான்.
*நாம் ஒவ்வொருவரும் கடவுளின் கையிலுள்ள பொம்மை போன்றவர்கள். அவர் நம்மை வாழ்வில் எந்த சூழ்நிலையில் வைத்திருந்தாலும், திருப்தியோடு ஏற்கப் பழக வேண்டும்.
*சோம்பலுக்கு சிறிதும் இடம் அளிக்காதீர்கள். உடல் மட்டுமல்ல மனமும் அதனால் கெட்டு
விடுகிறது. எப்போதும் சுறுசுறுப்புடன் ஏதாவது பணியில் ஈடுபடுங்கள்.
*கருணை இல்லாத ஒருவனை மனிதன் என்று சொல்ல முடியாது. எல்லா உயிர்கள் மீதும் இரக்கம் காட்டுவது மனிதனின் கடமை.
*பணக்காரன் பணத்தின் மூலமாகவும், ஏழை கடவுளின் திருநாமத்தை உச்சரிப்பதன் மூலமும் கடவுளுக்குத் தொண்டாற்ற வேண்டும்.
*வார்த்தையாலும் பிறரைத் துன்புறுத்துவது கூடாது. கடும்சொற்களைப் பேசுவதால், மனிதனின் சுபாவமே கொடுமையானதாகி விடும்.
*நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அதற்குரிய பயனைக் கொடுத்தே தீரும். அதற்குரிய சூழ்நிலையும் உங்களை நோக்கி வந்து விடும்.
*சந்தனத்தைத் தொட்ட கை மணப்பது போல, கடவுளைத் தியானித்து வந்தால், இதயத்தில் அருள் மணம் கமழ்ந்து கொண்டேயிருக்கும்.
*அனைத்து தீமைக்கும் பணமே அடிப்படையாக இருக்கிறது. உலகிலுள்ள ஆசைகளை எல்லாம் பணம் துõண்டில் போட்டு இழுத்து விடும்.
*எதற்காகவும் பிறர் மீது குற்றம் சுமத்த வேண்டாம். நமது செயல்களின் விளைவாகவே நாம் துன்பப்படுகிறோம் என்பதே நிதர்சனமான உண்மை.
*அனைவர் மீதும் கடவுள் கருணை மழை பொழிந்து கொண்டிருக்கிறார். அவரிடம் அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்கத் தேவையில்லை.
*கடமையில் இருந்து ஒருபோதும் தவறாதீர்கள். இருந்தாலும், பிரார்த்தனை செய்ய தினமும் சிறிது நேரமாவது ஒதுக்க மறவாதீர்கள்.
*போதும் என்ற மனநிறைவுக்கு நிகரான செல்வம் வேறில்லை. பொறுமைக்கு ஈடான சிறந்த பண்பு வேறில்லை. (மகான் சாரதாதேவியார்)