ராமேஸ்வரம் கோயிலில் பழமையான கோபுரம் பளிச்!
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி சோழர் கால கோபுரங்கள் புதுப்பிக்கும் பணி நடைபெறுகிறது. மலேசியா(கடாரம்), இலங்கை, மாலத்தீவு, கம்போடியா, இந்தியாவில் உ.பி., ஓடிசா உள்ளிட்ட பல பகுதிகளை வென்ற சோழர்களுக்கு, "கடாரம் கொன்றான், "கங்கை வென்றான் என பல பட்டங்கள் உண்டு. அந்த வகையில் இலங்கை மீது போர் தொடுக்க, ராமேஸ்வரத்தில் சோழர் படைகள் தங்கி இருந்தபோது, ராமாயணத்தில் தொடர்புடைய நளேஸ்வரர், நீலேஸ்வரர், கெவயேஸ்வரர் (அனுமான் படையில் இருந்த தளபதிகள்) ஆகியோருக்கு கோயில் கட்டினர். அதன்முன்பு சோழர் கட்டட கலை வடிவில் கோபுரங்களை எழுப்பினர். இதனை இன்றும் " சோழர் கோபுரம் என தொல்லியியல் ஆர்வலர்கள் அழைக்கின்றனர். தற்போதைய ராமேஸ்வரம் கோயில் கோபுர கலையுடன், சோழர் கோபுரம் மாறுபட்டு இருந்தாலும், அதனை அகற்ற சேதுபதி மன்னர்கள் விரும்பவில்லை. இந்நிலையில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் ஜனவரி 20ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையடுத்து 900 ஆண்டுகள் பழமையான சோழர் கோபுரங்கள் மராமத்து செய்து வர்ணம் பூசி புதுபொலிவுடன் காட்சியளிக்கிறது. கோயில் இணை ஆணையர் செல்வராஜ் கூறுகையில்,""சோழர் கட்டட கலை வடிவில் உருவான 3 கோபுரங்களும் பழமை மாறாமல் புதுப்பித்து வர்ணம் பூசும் பணி நடக்கிறது. திருப்பணிகள் அனைத்தும் ஜனவரி 5 க்குள் முடிந்துவிடும், என்றார்.