ஐயப்பனின் தங்க அங்கியை சுமக்கும் தமிழக பக்தர்!
பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி பக்தரின் சேவையை பாராட்டி, சபரிமலைக்கு ஐயப்பனின் தங்க அங்கியை சுமந்து செல்லும் வாய்ப்பை தொடர்ந்து 6வது ஆண்டாக சபரிமலை கோயில் நிர்வாகம் வழங்கியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்தவர் ராமையா,45. அகில இந்திய ஐயப்ப சேவா சங்க தமிழ் மாநில அமைப்பில் உள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக சபரிமலையில் பக்தர்களுக்கு சேவை செய்து வருகிறார். ஐயப்பனின் தீவிர பக்தரான ராமையாவை அனைத்து மாத பூஜை, மண்டல, மகர பூஜை காலங்களில் சபரிமலையில் பார்க்கலாம். மண்டல பூஜை சமயத்தில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவதால் அவசர உதவி செய்யும் சேவைப் பிரிவில் பணிபுரிய இவருக்கு சேவா சங்கம் வாய்ப்பு அளித்தது. கடந்த ஒரு மாத காலத்தில் இவர் 100க்கும் மேற்பட்ட மாரடைப்பால் பாதிப்படைந்த பக்தர்களை அவசர சிகிச்சை பிரிவிற்கு துாக்கிச் சென்று காப்பாற்றி உள்ளார். இறந்தவர்களின் உடலை அந்தந்த மாநிலத்திற்கு அனுப்பும் பணியிலும் முக்கிய பங்காற்றியுள்ளார்.இவரது சேவையை பாராட்டி 6 வது முறையாக ஐயப்பனுக்கு மண்டல பூஜையன்று அணிவித்த தங்க அங்கியை பம்பையில் இருந்து சபரிமலைக்கு சுமக்கும் வாய்ப்பை, அகில பாரத ஐயப்ப சேவா சங்க தமிழக அமைப்பு வழங்கியது. ராமையா கூறுகையில்,“ இறைவனின் சந்நிதியில் சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்தது எனது அதிர்ஷ்டம்” என்றார்.