பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு பாதை மோசம்!
திண்டுக்கல்: நத்தம் முதல் திண்டுக்கல் முத்தனம்பட்டி வரை பழநி செல்லும் ரோடு கற்கள் பெயர்ந்து போக்குவரத்திற்கு பயனற்றதாக இருப்பதால் பக்தர்களின் கால்களை பதம் பார்க்கிறது. பழநி தைப்பூச விழாவும், பங்குனி உத்திரமும் பிரசித்தி பெற்றவை. தைப்பூச விழாவில் 11 லட்சம் பக்தர்கள் கூடுவர். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வேண்டுதல் பயணமாக பாதயாத்திரை மேற்கொள்வர். காரைக்குடியில் இருந்து ரத்தினவேல், காவடி ஏந்திய குழுவினர் குறிப்பிடத்தக்க அளவில் நத்தம், திண்டுக்கல் வழியாக நடந்து செல்வர். தற்போது பழநி தைப்பூச விழாவிற்கு பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவக்கியுள்ளனர். அவர்களில் ஏராளமானோர் பழநியை நோக்கி நடந்து வருகின்றனர்.
ரோடு படுமோசம் : அந்த பக்தர்களின் பாதங்களை பதம் பார்க்கும் வகையில் பழநி ரோடு படு மோசமாக உள்ளது. நத்தத்தில் இருந்து திண்டுக்கல் வரும் வழியில் சாணார்பட்டியில் ரோடுகள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் நகருக்குள் ரோடுகளின் நிலையை சொல்ல வேண்டியதில்லை. முக்கிய ரோடுகள் அனைத்தும் தார் பெயர்ந்து சிறு, சிறு ஜல்லிக் கற்களுடன் கிடந்து வாகனங்களையும், பக்தர்களையும் பதம் பார்க்கின்றன. சிறிது நேரம் நடந்தாலே மூச்சு திணறும் அளவிற்கு புழுதி பறக்கிறது. திண்டுக்கல் முருகபவனம் முதல் முத்தனம்பட்டி வரையுள்ள 10 கி.மீ., துõர ரோடு பரிதாபமாக காட்சியளிக்கிறது. குண்டும், குழியுமாக உள்ளதால், பக்தர்களால் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் ஆங்காங்கு விபத்துக்களும் நடக்கின்றன. பழநி தைப்பூசம் வரும் 24ம் தேதி துவங்குகிறது. அதற்குள் ரோடுகளை அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதர் மண்டிய பாதை: பழநி: திண்டுக்கல், மதுரை, கொழுமம், தாராபுரம் ரோடுகளில், ஆண்டுதோறும் பக்தர்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். ஒட்டன்சத்திரம்- பழநி வரை பாதயாத்திரை பக்தர்களுக்காக அகலப்படுத்தப்பட்ட ரோடு பல இடங்களில் சேதமடைந்து, குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் 6 அடி அகலம் உள்ள ரோடு புதர்மண்டி செடி,கொடிகள் வளர்ந்து வெறும் 2 அடியாக குறுகியுள்ளது. பக்தர்களுக்கான நடைபாதையை பயன்படுத்த முடியாமல், ரோட்டோரத்தில் நடக்கின்றனர். அவ்விடங்களிலும் கற்கள், கண்ணாடி துகள் சிதறிகிடக்கின்றன. இதன்காரணமாக நடுரோட்டில் நடப்பதால் வேகமாக வரும் வாகனங்களால் கடந்த ஆண்டுகள் போல விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஒளிரும் குச்சிகள் அவசியம்: பழநியில் ஜன.,18ல் தைப்பூச விழா துவங்க உள்ளநிலையில் பாதயாத்திரை பக்தர்களின் வசதிக்காக செம்பட்டி, கன்னிவாடி, ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, மூலசத்திரம் பகுதிகளில் சேதமடைந்த ரோடுகளை உடனடியாக செப்பனிட வேண்டும். பக்தர்கள் இரவு நேர பயணத்தின் போது பயன்படுத்த இருளில் ஒளிரும் குச்சிகள் அளிக்க வேண்டும். புதர்மண்டி, சேதமடைந்துள்ள பாதயாத்திரைக்கு பக்தர்களுக்கான நடைபாதையை செப்பனிட வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட தேசிய, மாநில நெடுஞ்சாலை துறை, உள்ளாட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.