ஸ்ரீவி., ஆண்டாள் கோவிலில் ஸ்டாலின் மனைவி துர்கா!
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில், 2 மணி நேரம் சுவாமி தரிசனம் செய்த தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் மனைவி துர்கா, நாடு செழிக்கவும், மக்கள் சுபிட்சமாக வாழவும், நல்லாட்சி நிர்வாகம் ஏற்பட வேண்டி வழிபட்டேன், என தெரிவித்தார்.
தரிசனம்: நேற்று காலை, 7:05 மணிக்கு, உறவினர்கள் மூன்று பேர் மற்றும் முன்னாள் அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் மனைவி ஆதிலெட்சுமி ஆகியோருடன், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலுக்கு வந்த துர்கா, கோவில் கொடிமரம், மூலஸ்தான சன்னிதி, கண்ணாடி மண்டபத்தில் வீற்றிருந்த உற்சவர்களான ஆண்டாள், ரெங்கமன்னாரை தரிசித்தார். தங்க விமான கோபுர பணிகளை பார்வையிட்ட பின், கோவில் பிரசாதம் சர்க்கரை பொங்கல், புளியோதரையை வாங்கி சாப்பிட்டார்.
சடாரி ஆசீர்வாதம்: அங்கிருந்து வடபத்ரசயனர் சன்னிதி அருகே, ஆண்டாள் பிறந்த நந்தவனத்தில் உள்ள ஆண்டாளை தரிசித்தார். சக்கரத்தாழ்வாரை வணங்கி விட்டு, பெரியாழ்வார் சன்னிதியில் தரிசனம் செய்து, சடாரி ஆசீர்வாதம் மற்றும் பிரசாதம் பெற்றார். வடபத்ரசயனர் சன்னிதி கோபால விசாலத்தை பார்வையிட்டு, ராப்பத்து, பகல்பத்து உற்சவம் குறித்து கேட்டறிந்த அவர், தான் வீட்டில் இருக்கும்போது திருப்பாவை படித்துள்ளதாக, பட்டர்களிடம் தெரிவித்தார். ஆண்டாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த துர்காவிடம், யார் பெயருக்கு அர்ச்சனை? என பட்டர்கள் கேட்டபோது, உலக நலனுக்கு, என்றார். பின் அவர் கூறியதாவது: மார்கழி மாதத்தில் பெருமாளை தரிசிப்பது சிறப்பு. நான் சென்னையில் இருக்கும்போது, கோவில்களுக்கு செல்வேன்; நேற்று, ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலுக்கு சென்றேன். மார்கழி மாதத்தில் ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆண்டாளை தரிசிப்பது மேலும் சிறப்பு. நாடு செழிக்கவும், மக்கள் சுபிட்சமாக வாழவும், வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்கள் மீளவும், நல்லாட்சி நிர்வாகம் ஏற்படவும் வேண்டினேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். 9:15 மணிக்கு புறப்பட்டு சென்றார்.