உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை கோவிலில் லெகிங்ஸ், ஜீன்ஸ் அணிய தடை!

திருவண்ணாமலை கோவிலில் லெகிங்ஸ், ஜீன்ஸ் அணிய தடை!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஜீன்ஸ், லெகிங்ஸ் உள்ளிட்ட இறுக்கமான ஆடைகளை அணிந்து வர தடை விதித்து, கோவில் நிர்வாகம் அறிவிப்பு பலகை வைத்துள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு, தமிழகம் மட்டுமன்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வருகின்றனர். வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் அதிகளவில் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். கோவிலின் புனிதம், கண்ணியம் காக்கும் வகையில், பக்தர்களுக்கு உடை கட்டுப்பாடு விதித்து, கோவில் நிர்வாகம் சார்பில் கிளி கோபுரம் வாயிலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

இந்த உடை கட்டுப்பாடு, இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதில், பெண்கள் மற்றும் சிறுமியர், பிறர் கவனத்தை ஈர்க்கும் வகையில் இறுக்கமான ஆடைகளை அணியாமல், பாரம்பரிய ஆடைகளை அணிந்து வர வேண்டும். ஆண்கள், முழங்கால் பேன்ட் அல்லது வேட்டி அணிந்து வர வேண்டும். ஜீன்ஸ், லெகிங்ஸ், அரைக்கால் பேன்ட், முழங்காலுக்கு மேல் உள்ள பேன்ட் வகைகள் மற்றும் இறுக்கமான ஆடைகள் அணிந்து வரக்கூடாது. மீறி வருவோர், கோவிலுக்குள் வரும் போது தடுத்து நிறுத்தப்பட்டு வெளியேற்றப்படுவர் என, அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று காலை, சுவாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்த வெளிநாட்டினர், இந்த அறிவிப்பு பலகையில் இருந்த விதிமுறைகளை, அவர்களுடன் வந்த வழிகாட்டிகள் மூலம் கேட்டறிந்தனர். பின், ஜவுளி கடைக்குச் சென்று காவி வேட்டி வாங்கி அணிந்து, அதன் பின் சுவாமி தரிசனம் செய்ய கோவிலுக்குச் சென்றனர். இவர்களின் செயலை கண்டு, கோவிலுக்கு வந்த மற்ற பக்தர்கள் பாராட்டினர். தற்போது, இது குறித்த அறிவிப்பு பலகை தமிழில் மட்டும் வைக்கப்பட்டுள்ளது. இதே போல் ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என, பக்தர்கள் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !