தி.மலை கோவிலில் விபூதி பிரசாதம் கிடைக்காமல் பக்தர்கள் அவதி
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், விபூதி, குங்குமம் பிரசாதம் பாக்கெட் செய்வதற்காக, 5 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இயந்திரம் பயன்பாடில்லாமல் உள்ளது. இதனால் பக்தர்கள் பிரசாதம் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து செல்கின்றனர். பவுர்ணமி, தீபத்திருவிழா போன்ற விசேஷ தினங்களில், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து, நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, விபூதி, குங்குமம் பிரசாதம் கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்படுவதில்லை. இதனால் பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புகள், பக்தர்களுக்கு விபூதி, குங்குமம் பிரசாதம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, இதற்காக போராட்டமும் நடத்தினர். இதையடுத்து, கடந்த, 2010ம் ஆண்டு, 5 லட்சம் ரூபாய் மதிப்பில், விபூதி, குங்குமம் பாக்கெட் செய்யும் இயந்திரம் கோவில் நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டது. இதன் மூலம் பிரசாதம் பாக்கெட் செய்யப்பட்டு, தரிசனம் முடித்து திரும்பும் பக்தர்களுக்கு, கிளிகோபுர வாயிலில் வழங்கப்பட்டது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், இது, ஆறு மாதங்கள் வரை மட்டுமே நடைமுறையில் இருந்தது. தொடர்ந்து பிரசாதம் வழங்குவதை கோவில் நிர்வாகம் நிறுத்தி விட்டது. இதற்காக வாங்கப்பட்ட இயந்திரமும் பயன்பாடில்லாமல் உள்ளது. இந்நிலையில், தற்போது தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், 10 ரூபாயை கோவில் குருக்களுக்கு அர்சசனை தட்டில் செலுத்தினால் மட்டுமே, விபூதி, குங்குமம் பிரசாதம் தருகின்றனர். மற்றவர்களுக்கு நெற்றியில் இட்டுக் கொள்ள சிறிது மட்டும் வழங்கிவிட்டு அனுப்பி விடுகின்றனர். இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள், வீட்டிற்கு பிரசாதம் எடுத்துச் செல்ல வழியின்றி தவித்து வருகின்றனர். எனவே, பக்தர்கள் வசதியை கருத்தில் கொண்டு, மீண்டும், விபூதி, குங்குமம் பிரசாதம் பாக்கெட் செய்யும் இயந்திரத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்து, அனைவருக்கும் பிரசாதம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.