மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அனைத்து உயிர்களுக்கும் படியளந்தருளிய லீலை
மதுரையில், அனைத்து உயிர்களுக்கும் படியளிக்கும் வகையில், (ஜன 2) அஷ்டமி சப்பரத்தில் மீனாட்சி அம்மனும், சுவாமி சுந்தரேஸ்வரரும் வீதி உலா வந்தனர். ஒரு சமயம் உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் படியளப்பதற்காக சிவபெருமான் புறப்பட்டார்.
அவரை சோதிக்க நினைத்த அம்மன், பாத்திரத்தில் எறும்பு ஒன்றை அடைத்து வைத்தார். எல்லா உயிர்களுக்கும்படி அளந்த திருப்தியில் திரும்பிய சிவபெருமானிடம், ஒரு உயிருக்கு மட்டும் நீங்கள் படியளக்கவில்லை, என்றார் அம்மன் பாத்திரத்தை திறந்து பார்த்தபோது, அந்த எறும்புக்கு அருகிலும் அரிசி இருந்தது, இதை நினைவு கூறும் வகையில், மார்கழி தேய்பிறை அஷ்டமி நாளில், சுவாமியும் அம்மனும், மதுரை நகர் வீதிகளில் வழியாக அனைத்து உயிர்களுக்கும் படி அளக்கும் வகையில் உலா வருவது வழக்கம்.
அதன்படி (ஜன 2) அதிகாலை கோயிலில் இருந்து சுவாமியும் அம்மனும் புறப்பாடாகி, கீழமாசிவீதிக்கு வந்தனர். அங்கு சப்பரங்களில் எழுந்தருளி, யானைக்கல், வடக்குவெளிவீதி, கீழவெளிவீதி, தெற்குவெளிவீதி, திருப்பரங்குன்றம் ரோடு, மேலவெளிவீதி, குட்ஷெட்தெரு, நாயக்கர் புதுத்தெரு, வக்கீல் புதுத்தெரு, கீழமாரட் வீதி, காமராஜர் ரோடு,விளக்குத்தூண், வழியாக தேரடிக்கு வந்தனர். வரும் வழியில், ஜீவராசிகளுக்கு படியளப்பதற்காக, ரோட்டின் இருபுறமும் பக்தர்கள் அரிசியை தூவி வந்தனர்.