உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாமல்லபுரம் நினைவு சின்ன நுழைவு கட்டணம் உயர்வு!

மாமல்லபுரம் நினைவு சின்ன நுழைவு கட்டணம் உயர்வு!

மாமல்லபுரம்: மாமல்லபுரம் பாரம்பரிய தொல்பொருள் சின்னங்களுக்கான, பார்வையாளர் நுழைவுக் கட்டணத்தை, இரு மடங்காக உயர்த்த, மத்திய தொல்லியல் துறை, மத்திய அரசிடம் பரிந்துரைத்து, அனுமதிக்காக காத்திருக்கிறது. இந்தியாவில் உள்ள, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, பாரம்பரிய நினைவுச் சின்னங்களை, மத்திய தொல்லியல் துறை, பராமரித்து, பாதுகாத்து வருகிறது. பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய சின்னங்களை காணவரும் பார்வையாளர்களிடம், 1996ல் இருந்து, நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தமிழகத்தில், மாமல்லபுரம், செஞ்சி, திண்டுக்கல், சித்தன்னவாசல் மற்றும் சென்னை அருங்காட்சியகம் ஆகியவற்றை காண, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மாமல்லபுரத்தில், இந்தியர்களுக்கு தலா 10 ரூபாய்; வெளிநாட்டினருக்கு, தலா 250 ரூபாய்; பிற சின்னங்களில், நம் நாட்டினருக்கு, தலா 5 ரூபாய்; வெளிநாட்டினருக்கு, தலா 100 ரூபாய் என, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொல்பொருள் சின்ன வளாக நுழைவாயிலில், நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது தொல்லியல் துறையின் இணையதளத்தில், மின்னணு முறையில் நுழைவுச் சீட்டை பெற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், 1996ல் நிர்ணயித்த கட்டணத்தை தற்போது உயர்த்த, மத்திய தொல்லியல் துறை முடிவெடுத்து உள்ளது. தொல்லியல் துறை, மத்திய கலாசார துறையின் கீழ் உள்ளதால், அந்த துறை, கட்டணத்தை உயர்த்துவது குறித்து, மத்திய அரசிடம் பரிந்துரைத்து உள்ளது. அதன்படி, 5 ரூபாய், 10 ரூபாயாகவும்; 10 ரூபாய், 20 ரூபாயாகவும்; 100 ரூபாய், 200 ரூபாயாகவும்; 250 ரூபாய், 500 ரூபாயாகவும் உயர்த்தப்படலாம் என, தெரிகிறது. இதுகுறித்து, தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தொல்லியல் துறையில் மட்டுமே, கட்டணத்தை உயர்த்தாமல், துவக்க கால கட்டணத்தையே வசூலித்து வருகிறோம், என்றார்.மேலும், பிற துறைகளின் கட்டணம், பல மடங்கு உயர்ந்த நிலையில், நாங்களும் அதுபற்றி பரிசீலித்து, அரசிடம் பரிந்துரைத்து உள்ளோம். அரசின் முடிவின்படி செயல் படுவோம், என்றார்.இதுகுறித்து, மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்த, சென்னையைச் சேர்ந்த கார்த்திகேயன் கூறுகையில், குடும்பமாகவோ, குழுவாகவோ வருபவர்களுக்கு, கட்டண உயர்வு கசக்கவே செய்யும், என்றார். பெங்களூரைச் சேர்ந்த சித்தார்த் கூறுகையில், விருப்பம் உள்ளவர்களே நுழைவுக் கட்டணம் செலுத்தி பார்க்கின்றனர்; மற்றவர்கள், வெளியிலிருந்தே பார்ப்பதால், கட்டணம் ஒரு பொருட்டல்ல, என்றார்.- நமது நிருபர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !