திருக்காமீஸ்வரர் ராஜகோபுரத்தில் ஓவியம்: பொதுமக்கள் பார்வை!
வில்லியனுார்: திருக்காமீஸ்வரர் கோவில் கோபுரம் முதன் முதலில் ஆயில் பெயின்ட் மூலம் ஓவியம் தீட்டப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர். வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் கடந்த 11ம் நுாற்றாண்டில் தர்மபால சோழனால் கட்டப்பட்டது. இந்த கோவில் இரண்டு ராஜகோபுரங்கள் உள்ளது. அதில் தெற்கு கோபுரம் 99 அடி உயரத்தில் ஏழு நிலைகளில் பல்வேறு சுவாமிகள் அழகிய கலைநயத்துடன் கூடிய சிற்பங்களை கொண்டுள்ளது. மேலும் 59 அடி உயம் கொண்ட கிழக்கு ராஜகோபுரம் ஐந்து நிலைகளிலும் இதே போன்று சிலைகளை கொண்டுள்ளது. கோவில் திருப்பணியை முன்னிட்டு கடந்தாண்டு ஆக., மாதம் தெற்கு ராஜகோபுரம் பழுது நீக்கி ஆயில் பெயின்ட் அடிக்க முடிவு செய்தனர். அதன்படி ரூ. 48 லட்சம் செலவில் தெற்கு ராஜ கோபுரம் பழுதடைந்த பகுதிகளை சரி செய்து ஆயில் பெயின்ட் அடித்துள்ளனர். திருக்காமீஸ்வரர் கோவில் தற்போது தான் முதன் முதலாக இயற்கை எழில் மிகும் வகையில் ஆயில் பெயின்ட் மூலம் ராஜகோபுரங்களில் உள்ள சிலைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இதனை வில்லியனுார் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.