தூத்துக்குடி சாயர்புரத்தில் பொங்கல் வைத்து கொண்டாடிய வெளி நாட்டினர்!
தூத்துக்குடி: தூத்துக்குடி சாயர்புரத்தில் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினர். தூத்துக்குடிக்கு இங்கிலாந்து, அமெரிக்கா, போலந்து, ஆஸ்திரேலியா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளை சேர்ந்த 42 பேர் வருகைதந்தனர். இவர்கள் டிச., 28 ல் இந்தியா வந்துள்ளனர். புதுச்சேரி, தஞ்சாவூர், மதுரை ஆகிய இடங்களை சுற்றிப்பார்த்தனர். நேற்று காலை தூத்துக்குடிக்கு வந்தனர். அங்கிருந்து 16 ஆட்டோக்களில் சாயர்புரத்திற்கு சவாரி சென்றனர். அங்கள்ள வயல் வெளியில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சேலை அணிந்து பல அணிகளாக பிரிந்து திறந்த வெளியில் பொங்கல் வைத்தனர். இதனை ருசித்துப்பார்த்த நடுவர்கள் சிறந்த அணிக்கு பரிசுகள் வழங்கினர். தமிழகர்களின் பாரம்பரிய உணவு வகைகள், பழக்க வழக்கங்களை ஆச்சரியத்துடன் கேட்டு மகிழ்ந்தனர்.
கனடாவை சேர்ந்த கேத்ரின் தெரிவித்தாவது: எங்கள் நாட்டில் பனியை அதிகமாக பார்த்த எங்களுக்கு இங்குள்ள இதமான வெப்பம் பிடித்திருந்தது. வேட்டி, சேலை போன்ற பாரம்பரிய உடைகள் அணிவது புதுமையாக இருந்தது. இந்தியர்களின் கலாச்சாரம் மிகவும் பிடித்துள்ளது, என்றார். இங்கிலாந்தை சேர்ந்த ஷாலி கூறியதாவது: தமிழர்களில் பொங்கல் பண்டிகை இயற்கையை போற்றும் விதம், அதற்கு நன்றி தெரிவிப்பது எங்களுக்கு அவர்களின் மீதான மதிப்பினை உயர்த்தியுள்ளது. திறந்த வெளியில் பொங்கல் சமைத்து, சுவைத்தது, தனி அனுபவமாக இருந்தது. இதனை மிகவும் ரசித்தேன், என்றார்.