உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிரிவலப்பாதையில் பெருகி வரும் சிற்ப கலைக்கூடம்

கிரிவலப்பாதையில் பெருகி வரும் சிற்ப கலைக்கூடம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், பெருகி வரும் சிற்ப கூடத்துக்கு பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இருப்பினும், சிலை தயாரிப்பின் போது பறக்கும் தூசி, சத்தம் போன்றவை பொதுமக்களுக்கு இடையூறாகவும் உள்ளது. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் புதிதாக, 10 சிற்ப கூடங்கள் உள்ளன. இங்கு விநாயகர், மாரியம்மன், கிருஷ்ணர், மதுரைவீரன், அய்யனார், ஆஞ்சநேயர் என வெவ்வேறு விதமான ஸ்வாமி சிலைகளையும், ரமணர், சாய்பாபா, யோகிராம், போன்ற மகான்கள் சிற்பங்களையும் உருவாக்குகின்றனர். ஒரு அடி உயரம் முதல், எத்தனை அடி உயரம் எவ்வளவு அகலம் கொண்ட சிலைகள் வேண்டுனாலும் ஆர்டர் பெற்று செய்து கொடுக்கின்றனர். விநாயகர் சிலைக்கும், மாரியம்மன் சிலைக்கும் கடும் கிராக்கி ஏற்படுவதால், சிற்பிகள் விநாயகர் சிலை மற்றும் மாரியம்மன் சிலையை ஆர்டர் கொடுக்காமலே தயாராக செய்து வைத்துள்ளனர். சிலைகளை பச்சை கல், கருங்கல், மாவுக்கல் என மூன்று வகை கல்லில் செய்கின்றனர். இதில், பச்சைக்கல்லில் செய்யப்படும் சிலைக்கு கடும் கிராக்கி உண்டு, சற்று விலையும் கூடுதல். ஒரு அடி சிலை, 3,000 முதல் 5,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது, ஆனால், கருங்கல் மற்றும் மாவுக்கல்லால் செய்யப்படும் ஒரு அடி சிற்பங்கள், 600 முதல் 1,300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன. திருவண்ணாமலை மாவட்டத்தில் செம்மங்குலம் பகுதியில் மட்டுமே பச்சைக்கல் கிடைக்கிறது, இங்கிருந்து கற்களை எடுத்து வர வருவாய்த்துறை மற்றும் கனிமவளத்துறையினர் கடுமையான நிபந்தனைகளை விதிப்பதால், இந்த கல்லை எடுத்து வர சிற்பிகள் ஆர்வம் காட்டுவதில்øலை. மாவுக்கல்லால் செய்யப்படும் சிற்பங்கள் விரைவில் சேதமடைய வாய்ப்பு உள்ளதால் அந்த கல்லில் சிற்பங்களை செய்வதில் சிற்பிகள் ஆர்வம் காட்டுவதில்லை, எளிதாக கிடைக்கும் கருங்கல்லை கொண்டு, சிற்பங்களை அதிக அளவில் உருவாக்கி வருகின்றனர். சிற்பிகள் மாதத்துக்கு, 20 முதல் 50 சிலைகள் வரை உற்பத்தி செய்து விற்பனை செய்கின்றனர். இவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு, 30 ஆயிரம் முதல் 40,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. தொழிற்பேட்டை போல், ஒரு இடத்தை அமைத்து கொடுக்க வேண்டும். சிற்பங்கள் செய்வதற்கு வேண்டிய கற்கள் எளிதாக கிடைக்க, மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும். சிற்பங்களை புதிய வடிவில் உருவாக்க அரசு பயிற்சி அளிக்க வேண்டும். சிலை வடிக்கும் போது ஏற்படும் கற்களிலிருந்து ஏற்படும் மாசு புகையால் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. எனவே, ஆண்டுக்கு ஒரு முறை சிற்பிகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். சிற்பிகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள ஓய்வூதியம் பெற்றுத் தர அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும் என, கோரிக்கை விடுக்கின்றனர். கிரிவலப்பாதையில் சிற்ப கலைக்கூடங்கள் அமைந்திருப்பதால், கற்களிலிருந்து மாசு புகை பக்தர்களை பாதிக்கிறது, கடும் இரைச்சலையும் உண்டாக்குகிறது, எனவே சிற்பகலைஞர்களுக்கு வேறு இடம் ஒதுக்கி தந்து பக்தர்களுக்கு எந்தவித இடையூறு இல்லாமல் செய்ய வேண்டும் எனவும், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !