சென்னிமலையில் இன்று கழிவு ஆடித்திருவிழா
சென்னிமலை: சென்னிமலையில் உள்ள சாயப்பட்டறைகளில் இன்று கழிவு ஆடித்திருவிழா கொண்டாடப்படுகிறது. சென்னிமலையில் நெசவுத் தொழில் பிரதானமாக உள்ளது. இதன் முக்கிய உபத்தொழிலான சாயப்பட்டறைகளில் 5,000 பேர் பணிபுரிகின்றனர். சாயப்பட்டறைகளில் பல ஆண்டுகளாக கழிவு ஆடித்திருவிழா கொண்டாடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் கடைசி புதன் கிழமை இவ்விழா கொண்டாடப்படும். இந்த ஆண்டு விழா இன்று சென்னிமலை சாயப்பட்டறைகளில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதிகாலை முதலே சாயப்பட்டறைகள் சுத்தம் செய்யப்பட்டு, வர்ணம் பூசி, அடுப்பு அருகில் பொங்கல் வைத்து, கிடாய் வெட்டி, கிட்டி மரம் அருகே ஸ்வாமி கும்பிடுவர். மதியம் கிடாய் கறி விருந்தை, தொழிலாளர்களும், முதலாளிகளும் உண்டு மகிழ்வர் கழிவு ஆடித் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், விசைத்தறி கூடங்கள், கூட்டுறவு சங்கங்களும் விடுமுறை அளிக்கப்படும். நடப்பாண்டு கழிவு ஆடித் திருவிழா குறைவான பட்டறைகளில்தான் கொண்டாடுகின்றனர். பல பட்டறைகளில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளித்து, கழிவு ஆடி பணம் என, 200 ரூபாய் மட்டும் வழங்க முடிவு செய்துள்ளனர். கழிவு ஆடித் திருவிழா கொண்டாட்டம், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கெடுபிடியால் குறைந்து விட்டது என்கின்றனர் சாயப்பட்டறை முதலாளிகள். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கிடாய்கள் வெட்டப்படும். நடப்பாண்டு 200 கிடாய்களுக்கும் குறைவாகத்தான் விற்பனையாகியுள்ளன.