உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எருமேலியில் பேட்டைத்துள்ளல் நிறைவு: இன்று திருவாபரணம் புறப்படுகிறது

எருமேலியில் பேட்டைத்துள்ளல் நிறைவு: இன்று திருவாபரணம் புறப்படுகிறது

சபரிமலை:மகரவிளக்குக்கு முன்னோடியாக எருமேலியில் பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் நேற்று நிறைவு பெற்றது. இன்று பந்தளத்தில் இருந்து திருவாபரணம் புறப்படுகிறது.சபரிமலையில் வரும் 15-ம் தேதி மகரவிளக்கு பெருவிழா நடைபெறுகிறது. இதற்காக கேரள உள்துறை அமைச்சர் சென்னித்தலா தலைமையில் போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சபரிமலையில் மகரவிளக்கு நாளில் ஐந்தாயிரம் போலீசாரையும், கோட்டயம், பத்தணந்திட்டை, இடுக்கி மாவட்டங்களில் நான்காயிரம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டது.

பேட்டைத் துள்ளல் நிறைவு: கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் எருமேலியில்  பேட்டைத்துள்ளல் நடைபெற்றாலும் மகரவிளக்குக்கு இரண்டு நாட்கள் முன்னதாக நடைபெறும் அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டைத்துள்ளல் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். நேற்று பகல் 12.45 மணி வாக்கில் ஆகாயத்தில் வட்டமிட்டு பறந்த கருடனை கண்டதும் பேட்டை தர்ம சாஸ்தா கோயிலில் இருந்து அம்பலப்புழா பக்தர்கள் நெற்றிப்பட்டம் சூடிய யானைகளுடன் பேட்டைத்துள்ளி வந்தனர். மூன்று யானைகள் அணிவகுக்க பேட்டை துள்ளிய இவர்கள் பெரிய சாஸ்தா கோயிலில் நிறைவு செய்த பின்னர் பெரு வழிப்பாதை வழியாக சபரிமலை சென்றனர். இதுபோல ஆலங்காடு பக்தர்கள் மாலை மூன்று மணிக்கு வானில் பிரகாசித்த நட்சத்திரத்தை கண்டதும்பேட்டை துள்ளினர். இந்த இரண்டு குழுவினரின் பேட்டைத்துள்ளலுடன், பேட்டைத் துள்ளல் நிறைவு பெற்று விட்டது.திருவாபரணம் இன்று புறப்பாடு மகரவிளக்கு நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள் இன்று பந்தளத்தில் இருந்து புறப்படுகிறது. பந்தளம் மன்னர் குடும்பத்தில் ஏற்பட்ட மரணம் காரணமாக இந்த ஆண்டு பந்தளம் சாஸ்தா கோயிலில் திருவாபரணம் கொண்டு செல்லப்பட மாட்டாது. இங்கு தரிசனமும் கிடையாது. பந்தளம் அரண்மனை அருகே அலங்கரிக்கப்பட்ட பந்தலில் திருவாபரண பெட்டி வைக்கப்பட்டு பகல் ஒரு மணிக்கு புறப்படும். திருவாபரணங்கள்  செல்லும் காட்டு பாதையில் செடி கொடிகள் வெட்டி சீரமைக்கப்பட்டுள்ளது. சபரிமலை சன்னிதானத்தில் மகரவிளக்குக்கு முன்னோடியான பிரசாத சுத்தி பூஜைகள் இன்று தீபாராதனைக்கு பின்னர் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !