பழநியில் தரிசனத்திற்கு 5 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்!
பழநி: பொங்கல் பண்டிகையையொட்டி பழநியில் (ஜன., 15) அதிகாலை 4 மணி முதல் குவிந்த பக்தர்கள் ஐந்து மணிநேரம் வரை காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர்.
தைப்பூசவிழாவை முன்னிட்டு பழநி கோயிலுக்கு பாதயாத்திரை பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு மலைக்கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடந்தது. கோயில் தங்கும் விடுதிகள், தனியார் லாட்ஜ்கள் நிரம்பியிருந்தன.மலைக்கோயில், திருஆவினன்குடிகோயில், பெரியநாயகியம்மன் கோயில், பெரியாவுடையார் கோயில், பட்டத்துவிநாயகர் கோயில்களிலும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரினசம் செய்தனர்.பக்தி பரவசம்பழநி மலைக்கோயிலில் பக்தர்கள் பால்குடம் மற்றும் வேல் அலகு குத்தி, காவடிகள் எடுத்து, ஆட்ட பாட்டத்துடன் வெளிப்பிரகாரத்தை வலம் வந்து, ஞான தண்டாயுத சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில் இரண்டு மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் மலைக் கோயில் சென்றனர். அங்கு பொதுதரிசனம் மற்றும் வி.ஐ.பி., கட்டண வழி உட்பட அனைத்து வழிகளிலும் கோயில் வெளிப்பிரகாரம் வரை காத்திருந்த பக்தர்கள் 5 மணி நேரத்திற்கு பின் மூலவர் ஞானதண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர்.