முத்துலாபுரம் ஆயிரம் அரிவாள் கருப்பணசாமி கோயில் திருவிழா
வத்தலக்குண்டு: முத்துலாபுரம் ஆயிரம் அரிவாள் கருப்பணசாமி கோயில் திருவிழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நள்ளிரவு வரை அரிவாள் ஏந்தி நேர்த்திகடன் செலுத்தினர்.
வத்தலக்குண்டு அருகே முத்துலாபுரத்தில் கருப்பணசாமி கோயில் திருவிழா ஆண்டு தோறும் தை 3ம் தேதி நடக்கிறது. நேற்று அதிகாலையில் பக்தர்கள் நுாற்றுக்கும் மேற்பட்ட கிடாக்களை வெட்டி அன்னதானம் நடத்தினர். மாலையில் பூஜாரிகள் கூல்சாமி, ராமசாமி, பாலு ஆகியோர் நேர்த்திக் கடன் செலுத்தப்படும் அரிவாள்களுக்கு பூஜை நடத்தினர். இரவு 7 மணியளவில் அரிவாள்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கருப்பணசாமிக்கு செலுத்தப்பட்டன. ஊர்வலத்தின் போது வெளியூர் பக்தர்கள் சாமியாடி வருபவர்களிடம் தங்களது குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டுமாய் கால்களில் விழுந்து வரம் கேட்பது முக்கிய நிகழ்வு.
கோயிலின் சிறப்பு: கருப்பணசாமிக்கு நினைத்த காரியம் நிறைவேறியதும் 3 அடி முதல் 36 அடி உயரம் வரை உள்ள அரிவாள்களை காணிக்கையாக செலுத்துவர். இந்த ஆண்டு முதல் அரிவாள் நீளம் 11 அடி வரை மட்டுமே செலுத்த வேண்டும் என, கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அரிவாள்களை பெரியதம்பி, முருகன், தங்கவேல், சண்முகம் ஆகியோர் ஒரு மாதம் விரதமிருந்து செய்தனர். திருமங்கலத்தைச் சேர்ந்த கருப்பையா தெய்வங்களின் படங்கள், பூக்கள், ஆன்மீக குறியீடுகளை அச்சில் வரைந்து அழகு படுத்தினார்.