மதுரை கூடலழகர் பெருமாள் சிலையில் திடீர் விரிசல்:இரவோடு இரவாக பரிகார யாகம்!
மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் உற்சவ சிலையின் கால் பகுதியில் திடீரென விரிசல் ஏற்பட்டதால் இரவோடு இரவாக பரிகார யாகம் நடத்தப்பட்டது. புது சிலை செய்ய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.ஆண்டுதோறும் தை 2ம் நாள், மதுரை அனுப்பானடியில் நடக்கும் பாரி வேட்டை நிகழ்ச்சிக்காக கூடலழகர் பெருமாள் கோயிலில் இருந்து உற்சவ சிலை எடுத்து வரப்படும். நேற்றுமுன்தினம் இரவு சுவாமி பாரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. இதற்காக குதிரை வாகனத்தில் சிலையை வைத்தபோது, திடீரென சரிந்தது. கோயில் நிர்வாகத்தினர், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சிலையை கோயில் நிர்வாக அதிகாரி அனிதா தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, கால் பகுதியில் விரிசல் ஏற்பட்டிருப்பது தெரிந்தது. இதுகுறித்து ஜீயர் ஒருவரிடம் அதிகாரிகள் ஆலோசித்தனர். சிலை சேதமடைந்தால் உடனடியாக உற்சவ நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு, கோயிலுக்கு எடுத்துச் சென்று பரிகார யாகம் நடத்த வேண்டும் என அவர் தெரிவித்தார். இதைதொடர்ந்து, கோயிலுக்கு இரவோடு இரவாக சிலை எடுத்துச்செல்லப்பட்டு பரிகார யாகம் நடத்தப்பட்டது. மீண்டும் தங்கள் ஊருக்கு சுவாமி சிலை எடுத்துவரப்பட வேண்டும் என கோயில் நிர்வாகத்திடம் அனுப்பானடி மக்கள் வலியுறுத்தினர். சிலையின் பாதுகாப்பு கருதி அதிகாரிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.
கோயில் நிர்வாகம் தரப்பில் கூறியதாவது: ஐம்பொன்னலான உற்சவ சிலை 500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இதனால் அதன் உறுதிதன்மை குறைந்து விரிசல் ஏற்பட்டிருக்கலாம் எனக்கருதுகிறோம். புதுச்சிலை செய்ய திட்டமதிப்பீடு செய்து அரசுக்கு அனுப்பியுள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் சிலை செய்யப்படும். அதுவரை சிலையின் பாதுகாப்பு கருதி, உற்சவ நிகழ்ச்சிகளில் வேறு சிலையை பயன்படுத்துவதா என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும், என்றனர்.