400 ஆண்டுகளுக்கு பின் கோவிலில் பெண்களுக்கு அனுமதி!
ADDED :3717 days ago
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலுக்குள் நுழைய, 400 ஆண்டுகளுக்குப் பின், பெண்களும், தலித் மக்களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உத்தரகண்ட் மாநிலம் கார்வால் ஜான்சர் பவார் மண்டலத்தில் உள்ள பரசுராமர் கோவிலுக்குள் நுழைய, பெண்கள் மற்றும் தலித்களுக்கு, கடந்த 400 ஆண்டுகளாக இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. மாறி வரும் காலத்துக்கு ஏற்ப இந்த முடிவை எடுத்ததாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என, தலித் மக்கள் கடந்த சில ஆண்டுகளாக போராடி வந்தனர். இந்த கோவிலில் விலங்குகளை பலியிடுவதை நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது குறித்த வழக்கின் விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வரும் நிலையில், உத்தரகண்ட் கோவில் நிர்வாகத்தின் முடிவு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.