உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆசியாவின் பெரிய உச்சிஷ்ட விநாயகர் கோயிலில் 400 ஆண்டுகளுக்கு பிறகு 20ம் தேதி கும்பாபிஷேகம்

ஆசியாவின் பெரிய உச்சிஷ்ட விநாயகர் கோயிலில் 400 ஆண்டுகளுக்கு பிறகு 20ம் தேதி கும்பாபிஷேகம்

திருநெல்வேலி: ஆசியாவிலேயே பெரியதும், ராஜகோபுரத்தை கொண்டதுமான நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள உச்சிஷ்ட விநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் வரும் 20ம் தேதி விமரிசையாக நடக்கிறது. திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றங்கரையில், மணிமூர்த்தீஸ்வரத்தில் உச்சிஷ்ட கணபதி ஆலயம் அமைந்துள்ளது. ராஜ கோபுரத்துடன் எட்டுநிலை மண்டபங்கள், மூன்று பிரகாரங்கள், கொடிமரத்துடன் கூடிய சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள விநாயகருக்கான தனித் திருக்கோயிலாகும். இங்கு உச்சிஷ்ட கணபதி நான்கு கரங்களுடன் யோகநிலையில் அருள் பாலிக்கிறார். இடது மடியில் அம்பாளை தாங்கியிருக்கிறார். இதில் நீராடி விநாயகரை வழிபட்டால் தோஷங்கள் யாவும் நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சித்திரை மாதத்தின் முதல் மூன்று நாட்களுக்கு அதிகாலையில் சூரிய ஒளி விநாயகர் மீது பரவும் வகையில் கட்டடக்கலை அமைந்துள்ளது.

1000 ஆண்டுகள் பழமை: இதன் கட்டட அமைப்பும் பழமையும், சுற்றுச்சுவர்களின் தன்மையும், சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்ட கோயில் என்பதை பறைசாற்றுகிறது. இக்கோயிலில் 400 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. கடந்த 2008ல் இங்கு திருப்பணிக்கான முயற்சிகள் நடந்தன. அறநிலையத்துறை வழங்கிய நிதி 9 லட்சத்து 70 ஆயிரம் மூலம், ராஜகோபுரப்பணிகள் நடந்துள்ளன. பொதுமக்களிடம் பெறப்பட்ட ரூ 2 கோடி நிதியின் மூலம் கன்னிமூல கணபதி மண்டபம், முருகன்வள்ளி மண்டபம் உள்ளிட்ட ஐந்து மண்டபங்கள் 3 அடி உயரத்திற்கு புதுப்பிக்கப்பட்டுள்ளன. புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. நெல்லையப்பர், காந்திமதியம்மன், புதிதாக 16 விநாயகர்கள் என சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்னமும் கூட போதிய நிதியின்மையால் சுற்றுச்சுவர் பணி பாதியில்நிற்கிறது. இக்கோயிலில் இன்று 18ம் தேதி யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேகம் துவங்குகிறது.20ம் தேதி புதன் கிழமை காலை 5.45 மணிமுதல் 6.40 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. இக்கோயிலில் வழிபட்டால், திருமணத்தடை நீங்கும். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் பெருகும்.என்ற நம்பிக்கையுள்ளதால் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்துசெல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !