மாதேஸ்வரர் கோவிலில் மண் உருவம் வைத்து வழிபாடு
பு. புளியம்பட்டி: ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டியிலிருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்தில், குட்டகம் கிராமத்தில், மாதேஸ்வரர் மலை கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும், மண் உருவ கால்நடை சிலைகளை வைத்து, சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம். நேற்று நடந்த இந்த விழாவில், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் திரளாக வந்து, தங்கள் கால்நடைகள் நோயின்றி வாழ, நேர்த்திகடனாக இரண்டு அடி உயரமுள்ள மாடு உருவ மண் சிலைகளை வைத்து, சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டனர். இதற்காக, மண் சிலைகளை தயாரிப்பவர்கள், கோவிலுக்கு வந்து, சிலைகளுக்கு பூஜை செய்து, கண் திறந்து வைத்தனர். ஒரு அடி உயரமுள்ள சிலை, 300 ரூபாய்க்கும், இரண்டு அடி உயரமுள்ள சிலை, 500 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இதையொட்டி நேற்று காலை, சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மாதேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.