உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்று ஆடி வெள்ளி கொண்டாட்டம்: இருக்கன்குடிக்கு 65 அரசு சிறப்பு பஸ்கள்

இன்று ஆடி வெள்ளி கொண்டாட்டம்: இருக்கன்குடிக்கு 65 அரசு சிறப்பு பஸ்கள்

தூத்துக்குடி : ஆடி வெள்ளியை ஒட்டி இன்று தூத்துக்குடி, நெல்லையில் இருந்து 65 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மூன்று நாள் விடுமுறையை ஒட்டி நாளை சென்னையில் இருந்து 20 சிறப்பு பஸ்கள் நெல்லை, தூத்துக்குடிக்கு இயக்கப்படுகிறது. நெல்லை அரசு போக்குவரத்துகழகம் மூலமாக தினமும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் சேர்த்து சுமார் ஆயிரம் பஸ்கள் வரை இயக்கப்பட்டு வருகிறது. பயணிகளின் வசதிக்கு ஏற்ப முக்கிய திருவிழாக்கள் போன்றவற்றிற்கும் அரசு போக்குவரத்துகழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இன்று ஆடி வெள்ளி திருவிழாவாகும். இந்துக்கள் இந்த நாளில் அம்மன் கோயிலுக்கு சென்று வழிபடுவர். அதுவும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து மிக அதிகமாக இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு ஆடிவெள்ளிக்கு அதிகமான பக்தர்கள் செல்வர். இதனால் அங்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். ஆடி வெள்ளிக்கு இருக்கன்குடிக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக நெல்லை அரசு போக்குவரத்துகழகம் சார்பில் 65 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தூத்துக்குடி, திருநெல்வேலி, கோவில்பட்டி, விளாத்திகுளம், சங்கரன்கோவில் ஆகிய இடங்களில் இருந்து இந்த பஸ்கள் இயக்கப்படுகிறது. இது தவிர வரும் 14ம் தேதி காமநாயக்கன்பட்டி பரலோக மாதா ஆலய திருவிழாவிற்கு 55 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சிவகாசி, கோவில்பட்டி, சங்கரன்கோவில், தூத்துக்குடி ஆகிய இடங்களில் இருந்து இந்த பஸ்கள் இயக்கப்படுகிறது. சுதந்திர தினவிழா மற்றும் சனி,ஞாயிறு விடுமுறை நாள் வருவதால் சென்னையில் இருந்து தூத்துக்குடி, நெல்லைக்கு அதிகமான மக்கள் வருவர். இதனை கருத்தில் கொண்டு நாளை (13ம் தேதி) சென்னையில் இருந்து தூத்துக்குடி, திருநெல்வேலிக்கு 20 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதே போல் 15ம் தேதி இரவு தூத்துக்குடி, திருச்செந்தூர், திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கு 20 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. விழா கால சிறப்பு பஸ்களை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று நெல்லை அரசு போக்குவரத்துகழக வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !