புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆவணி பிரம்மோற்சவ விழா துவக்கம்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆவணி பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு நான்காம் தேதி காலை ஏழரை மணிக்கு பந்தல்கால் முகூர்த்தம் நடந்தது. மாலை விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, பூர்வாங்கம் நடந்தது. நேற்று காலை ஒன்பது மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து அம்மன்படிச்சட்டத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்து பல்லக்கு 14ம் தேதி இரவு ஒன்பது மணிக்கு நடக்கிறது. ஆவணி மாதம் கடைசி ஞாயிறன்று செப்டம்பர் 11ம் தேதி திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.ஆவணி மாதம் ஒவ்வொரு வாரமும் அம்மன் சிம்ம வாகனம், அன்ன வாகனம், வெள்ளி ஹம்ச வாகனம், பூத வாகனம், வெள்ளி ரிஷப வாகனம், யானை வாகனம், குதிரை வாகனங்களில் புறப்பாடு நடந்து பக்தர்களுக்கு அருள்புரிவார்.விழா ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் ஞானசேகரன், பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, கண்காணிப்பாளர் அசோகன் ஆகியோர் செய்து வருகின்றனர்.