உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் 3 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்!

திருமலையில் 3 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்!

நகரி : திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோவிலில், கடந்த வெள்ளி முதல் நேற்று வரை, மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், சாமி தரிசனம் செய்தனர். வார விடுமுறை, சுதந்திர தின விடுமுறை காரணமாக, ஆயிரக்கணக்கான பக்தர்கள், கடந்த 12ம் தேதி வெள்ளியன்று இரவு முதல், திருமலையில் குவியத் தொடங்கினர். வெள்ளி, சனி ஆகிய இரு தினங்களில், ஒரு லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், சாமி தரிசனம் செய்தனர். ஞாயிறன்று காலை முதல், நள்ளிரவு வரை, பக்தர் கூட்டம் திருமலைக்கு வந்தவண்ணம் இருந்ததால், எங்கு பார்த்தாலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. வைகுண்டம் கியூ காம்ப்ளெக்சின் அனைத்து வளாகங்களும் நிரம்பி, இலவச கியூவில் நிற்கும் பக்தர்களின் கூட்டம், கோவிலுக்கு வெளியே 1 கி.மீ., தூரத்திற்கு நின்றிருந்தது. இதனால், ஞாயிறன்று இலவச தரிசன கியூவில் சென்ற பக்தர்கள், 20 மணி நேரமும், சிறப்பு நுழைவு 300 ரூபாய் டிக்கெட் பெற்றவர்கள், ஏழு மணி நேரமும் காத்திருந்து, சாமி தரிசனம் செய்தனர். விடுமுறை நாளான நேற்றும், தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் திருமலையில் குவிந்து வருவதால், இன்று பிற்பகல் வரை இந்நிலை நீடிக்கும் என, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

லட்டு பற்றாக்குறை: கடந்த இரு தினங்களில், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் லட்டு பிரசாதம் வாங்க குவிந்ததால், லட்டு பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், 4 லட்டுகள் வழங்கப்பட்டு வந்ததை, நேற்று இரண்டாக குறைத்து வழங்கினர்.

ஸ்ரீசைலம் கோவிலில் கூட்டம்: ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி கோவிலில், லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள், சாமி தரிசனம் செய்தனர். இங்குள்ள பாதாள கங்கையில் நேற்று முன்தினம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடி சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !