செல்வ முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கடலுார்: கடலுார், தேவி செல்வமுத்து மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.
கடலுார், செம்மண்டலத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அருகே அமைந்துள்ள தேவி செல்வ முத்து மாரியம்மன் கோவில் புதுப்பித்ததையொட்டி நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்கான பூஜை கடந்த 29ம் தேதி காலை விக்னேஷ்வர மற்றும் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. கடந்த 31ம் தேதி மாலை வாஸ்து சாந்தி, பிரவேசபலி, கலாகர்ஷணம், யாகசாலை பிரவேசம், புற்றுமண் எடுத்து யாகசாலை பூஜை துவங்கியது.
நேற்று முன்தினம் காலை நான்காம் கால யாக பூஜையும், மாலை 5ம் கால பூஜை, புதிய விக்ரகங்கள் கரிக்கோலம், கண் திறப்பு, கோ பூஜை, பிரம்மசாரி, பாலாம்பிகா, கன்னிகா, சுமங்கலி, தம்பதி பூஜைகளை தொடர்ந்து லலிதா சகஸ்கர நாமம், லலிதா திரிசதி அரச்சனை, விக்ரகங்கள் மற்றும் விமானங்களில் கலசங்கர் பிரதிஷ்டை செய்து அஷ்டபந்தன மருந்து சாற்றி மகா தீபாராதனை நடைபெற்றது.
நேற்று (3ம் தேதி) காலை 6ம் கால யாக பூஜை, நாடி சந்தானம், பூர்ணாஹூதி, மகா தீபாராதனையை தொடர்ந்து கலசங்கங்கள் புறப்பாடாகி காலை 9.35 மணிக்கு கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. மாலை சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையைத் தொடர்ந்து இரவு அம்மன் வீதியுலா நடந்தது.