மகாலட்சுமி வீட்டில் தங்க வேண்டுமா திருச்சி கல்யாணராமன் பேச்சு
மதுரை: மதுரை பாரதி யுவகேந்திரா சார்பில் சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் வில்லிபாரத தொடர் சொற்பொழிவு நடந்தது.திரவுபதி மானம் காத்தல் என்ற தலைப்பில் திருச்சி கல்யாணராமன் பேசியதாவது: எந்த ஒரு செயலை செய்தாலும் கடவுள் அருள் நமக்கு தேவை என்பதை நாம் உணர வேண்டும். நாம் ஏதாவது ஒரு செயலை செய்த பின் நான் தான் செய்தேன் என்று சொல்லிக்காட்ட கூடாது. நம் எதிர்காலத்தை தெரிந்து கொள்ளும் ஆவலுடன் அடிக்கடி ஜோசியம் பார்ப்பதை தவிர்ப்பது நலம்அமாவாசை நாட்களில் நம் முன்னோர்களுக்கு அவசியம் தர்ப்பணம் செய்ய வேண்டும். பிறர் குறை கூறும்படி நாம் நடந்து கொள்ளக் கூடாது. அதே போல் நம்மிடம் மது அருந்துதல் மற்றும் பிற தீய பழக்கங்கள் இருந்தால் மகாலட்சுமி நம் வீட்டில் தங்கமாட்டாள். கூனி இல்லை என்றால் ராமாயணம் இல்லை. சகுனி இல்லை என்றால் மகாபாரதம் இல்லை. எந்த பிரச்னையாக இருந்தாலும் அது ஆரம்பிக்கும் போதே தடுத்திட வேண்டும். விதி என்பது தீர்மானிக்கப்பட்ட உண்மை, அதை யாராலும் வெல்ல முடியாது. நாம் பிறரைப் பற்றி குறை கூறுவதை தவிர்த்து, நன்றி மறவாத வாழ்க்கை வாழ வேண்டும்.
பொழுது போகாமல் நேரத்தை வீணாக்குபவர்கள் இறை சிந்தனையில் இறங்கினால் மனதில் தெளிவு பிறக்கும். நல்லவர்களுடன் சேர்ந்து நல்ல பாதையில் பயணித்து, கடவுள் ஒருவர் தான் நம்மை காப்பார் என்று நம்பிக்கை கொள்ள வேண்டும். அச்சுதன் என்றால் நம்மை நழுவவிடாதவன் என்று அர்த்தம். கோவிந்தா என்றால் நம்மை காக்கிறவன் என்று அர்த்தம். கஜேந்தாழ்வார், பிரகலாதன், திரவுபதி இவர்களுக்காக மட்டும் தான் பகவான் அழுதார், என்றார். இன்று, பார்த்தனும் பசுபதியும் என்ற தலைப்பில் மாலை 6.30 மணிக்கு சொற்பொழிவு நடக்கும்.