தை அமாவாசை முன்னிட்டு காவிரியில் முன்னோருக்கு தர்ப்பணம்
கரூர்: ஐந்து யோகங்கள் ஒன்றாக கூடிய தை அமாவாசை, 223 ஆண்டுகளுக்கு பிறகு வந்ததால், கரூர் அடுத்த, நெரூர் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்தனர். ஆண்டு தோறும் ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை இந்த மூன்று அமாவாசைகள் முக்கியத்தும் பெற்றவை. இந்த நாட்களில், இறந்த தங்களின் முன்னோர்களுக்கு புன்னிய ஸ்தலங்களான காசி, ராமேஸ்வரம், கொடுமுடி, பவானி கூடுதுறை உள்ளிட்ட இடங்களில் தர்ப்பணம் கொடுக்க ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகின்றனர். அவ்வாறு தர்ப்பணம் கொடுப்பதால் தங்களுடைய மூதாதையர்களின் ஆத்மா சாந்தியடையும் என்றும், வருங்கால சந்ததியினயினர் நலமுடன் இருப்பார்கள் என்பது ஐதீகம். ஆண்டு தோறும் தை அமாவாசை வருவது வழக்கமான ஒன்று, ஆனால், நடப்பாண்டு தை அமாவாசை, 223 ஆண்டுகளுக்கு பிறகு ஐந்து யோகங்களும் ஒன்று சேர்ந்து வந்துள்ளது. அதாவது, திதி, வாரம், நட்சத்திரம்,யோகம், கரணம் என, ஐந்து யோகங்களும் ஒன்று சேர்ந்து வந்துள்ளது. அதனால், இந்த தை அமாவாசை முன்னிட்டு, கரூர் அடுத்த நெரூர் காவிரி ஆற்றில், நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள், அதிகாலை முதலே காவிரி ஆற்றில் நீராடி தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.
இதுகுறித்து, கரூரை சேர்ந்த குருக்கள் சிலர் கூறியதாவது: ஒரு ஆண்டை அயனம், பருவம், மாதம், பட்சம், வாரம், நாள், ராசி, திதி, யோகம், கரணம் என்றெல்லாம் கணக்கிட்டு ஒன்றுடன் ஒன்று சேரும்போதும், தனித்தனியே சில மாதங்களில் வரும்போதும் முக்கிய விரதங்களையும், வழிபாடுகளையும் தொன்று தொட்டு நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்துள்ளனர். ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு ராசிக்குள் சூரியன் பிரவேசிப்பது அமாவாசையாகும். திதிகளில் மிகவும் சிறப்பு பெற்றது, மகத்துவங்கள் கொண்டது அமாவாசை திதி. எல்லா மாதங்களில் வரும் அமாவாசை சிறப்பானதாக இருந்தாலும், புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை, ஆடி மாத அமாவாசை மற்றும் தை அமாவாசை ஆகிய, மூன்றும் சிறப்பு என கூறுவர். இந்நாளில் நம் முன்னோர்களை நினைத்து நாம் செய்கிற பூஜை வழிபாடு, தர்ப்பணம், அன்னதானம் போன்றவற்றை ஏற்றுக்கொள்வதற்காக அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருவதாக ஐதீகம். நடப்பாண்டு தை அமாவாசை, 223 ஆண்டுகளுக்கு பிறகு ஐந்து யோகங்களும் ஒன்று சேர்ந்து வந்துள்ளது சிறப்புக்குரியது. இவ்வாறு அவர்கள் கூறினர்.