பொன்னியம்மன் கோவிலில் மண்டலாபிஷேகம்
திருத்தணி: பொன்னியம்மன் கோவிலில், நேற்று நடந்த மண்டலாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
திருத்தணி அடுத்த, எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில் பொன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின், மகா கும்பாபிஷேகம், கடந்த, 12ம் தேதி நடந்தது. இதையடுத்து, மண்டலாபிஷேக சிறப்பு பூஜை நேற்று நடந்தது. விழாவை ஒட்டி கோவில் வளாகத்தில் ஒரு யாகசாலை, 5 கலசங்கள் வைத்து சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, காலை, 9:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, 4:00 மணிக்கு கோவில் வளாகத்தில் திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலை, 6:00 மணி முதல், இரவு, 7:00 மணி ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. இரவு, உற்சவர் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், எஸ்.அக்ரஹாரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.