உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரமடை அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

காரமடை அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவில் மாசிமகத் தேர்த்திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. கோவிலைச் சுற்றி பருந்து வட்டமிட்டதால், பக்தர்கள் பருந்தை பார்த்து வணங்கினர். கோவை மாவட்டம், காரமடையில் உள்ள அரங்கநாதர் கோவிலில், மாசிமகத் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, நள்ளிரவு கிராமசாந்தி பூஜை நடந்தது. நேற்று முன் தினம் காலை, 4:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் அரங்கநாத பெருமாளுக்கும், உற்சவ மூர்த்திக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

காலை, 10:00 மணிக்கு கருடாழ்வார் உருவம் பொறித்த கொடியை, யாகசாலையில் வைத்து, தச தரிசனமும், சிறப்பு பூஜைகளும் செய்தனர். அர்ச்சகர்கள் கொடியை கோவிலின் உள்ளே ஊர்வலமாக எடுத்து வந்து, கொடி மரத்தின் அடியில் உள்ள, பெரியதிருவடி கருடாழ்வார் சிலையின் முன்பு வைத்தனர். காலை, 11:00 மணிக்கு, 33 அடி உயரமுள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது, அங்கிருந்த நுாற்றுக்கணக்கான தாசர்கள், சங்கு ஊதியும், சேகண்டி அடித்தும் ’கோவிந்தா...ரங்கா’ என கோஷமிட்டனர். கோவிலின் மேலே வானத்தில், பருந்து ஒன்று வட்டமிட்டது. இதை பார்த்த பக்தர்கள், பருந்தை பார்த்து வணங்கினர். காரமடை அரங்கநாதர் கோவில் மாசிமகத் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியதை, பறந்து சென்று பக்தர்களுக்கு அறிவிக்கும் வகையில், கொடியில் கருடாழ்வார் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது, என்பது ஐதீகம்.

இவ்விழாவில், ராஜகோபுர திருப்பணி உபயதாரர்கள், முக்கிய பிரமுகர்கள், மிராசுதாரர்கள், கட்டளைதாரர்கள், பக்தர்கள் பங்கேற்றனர். இன்று இரவு அனுமந்த வாகனத்திலும், 19ல் கருட வாகனத்திலும் சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளது. 20ல் பெட்டத்தம்மன் அழைப்பும், 21ம் தேதி காலை, 5:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், அன்றிரவு யானை வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. 22ம் தேதி காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள் சுவாமி, தேருக்கு எழுந்தருளுகிறார். மாலை, 3:30 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. 23ல் குதிரை வாகனத்தில் பாரிவேட்டையும், 24ல் சேஷவாகனத்தில் தெப்பத்திருவிழாவும், 25ல் சாற்றுமுறை உற்சவமும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் கைலாஷ், மேலாளர் ராமராஜ், அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !